உண்மைசுடும்

Friday, 6 April 2012

சசிகலா சேர்ப்பு: வாராயோ தோழி வாராயோ…………!


ஜெயா-சசிகலா
கேடி நம்பர் 1 - சீசன் 2 முடிந்தது
கிட்டத்தட்ட இரு மடங்காய் மின் கட்டண உயர்வை அறிவித்த கையோடு உடன் பிறவா சகோதரி சசிகலாவோடு இனி காயில்லை, பழம்தானென்று அழைத்திருக்கிறார் ஜெயலலிதா. மயிலாப்பூர் கும்பலுக்கு ஆதரவான தினமலர், ஹிந்து, தினமணி, குமுதம் முதலான பார்ப்பன ஊடகங்கள் இந்த செய்தியை வேண்டா விருப்பாக கொஞ்சம் சோகத்துடனேயே வெளியிட்டிருக்கின்றன.
கடந்த டிசம்பரில் ஆரம்பித்த இந்த நாடகம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. எனினும் இதை முற்றிலும் நாடகம் என்றும் ஒதுக்கிவிட முடியாது. 1996ஆம் ஆண்டு நடந்த இதே போன்றொதொரு பிரிவு – சேர்க்கையிலிருந்து இந்த 2011-12 எபிசோடு அளவிலும் தன்மையிலும் வேறுபட்டது.
சசிகலாவின் சேர்க்கைதான் ஜெயாவின் ஊழலுக்கு காரணமென்று அவரது நீக்கத்தை போற்றிப் பாடிய பார்ப்பன ஊடகங்களின் திரித்தலை மறுத்து அப்போது ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஜெயா – சசி கும்பலின் ஊழல், அதிகார முறைகேடுகள், பார்ப்பனிய பக்தி, பாசிச ஆட்சி அனைத்திற்கும் ஜெயாவே பிரதானமான காரணமென்று அதில் சுட்டியிருந்தோம்.
பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கின் போதான நீதிபதியின் நேர்காணலுக்கு பதிலளித்த சசிகலா, சொத்து சேர்ப்பு குறித்த விவகாரம் எதிலும் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை என்று அறிவித்திருந்தார். பின்னர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தனது உறவினர்கள், நண்பர்கள் பலர் ஜெயவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முறையில் நடந்து கொண்டது தனக்கு தெரியாது, ஒருபோதும் தான் அக்காவிற்கு துரோகம் செய்ய நினைத்ததில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதை முக்கியத்துவம் கொடுத்து காட்டிய ஜெயா டி.வி அடுத்த நாளே அவர் மீதான நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக ஜெயா அறிவித்ததைக் காட்டியது. சகோதரிகள் மீண்டு சேர்ந்ததாக ஊடகங்களும் அறிவித்தன.
ஜெயா – சசி நட்பு என்பது வெறுமனே உணர்ச்சி சார்ந்த ஒன்றல்ல. ஊழல் – முறைகேடுகளால் கட்டியமைத்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பிரிக்கவொண்ணாத கூட்டாளிகள் என்பதே அவர்களுடைய உறவின் மையம். எனினும் இந்த சொத்துப் பேரரசின் கடிவாளம் யாரிடம் இருக்க வேண்டுமென்பது இருவரிடையே எற்பட்டிருக்கும் முரண்பாடு. இந்த முரண்பாடு நட்பு முரண்பாடா, பகை முரண்பாடா என்றால் நிச்சயம் இது பகை முரண்பாடாக போக முடியாத அளவுக்கு சொத்துரிமை விவகாரங்கள் தடுக்கின்றன. மீறிப் போனால் அது இருவருக்குமே பிரச்சினை.
ஜெயா-சசி கும்பல் கடந்த ஆட்சிக்காலங்களில் முழு தமிழகத்தையுமே மொட்டையடித்து சுரண்டிச் சேர்த்த சொத்துக்களின் வலிமையில்தான் அ.தி.மு.க எனும் அடிமைகளது கட்சியை கட்டி மேய்ப்பதோடு ஆட்சியையும் பிடிக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கின்றது. இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதால் எதை துறந்தாலும் அதன் விளைவு மற்றதை பாதிக்கும். அந்த பயம்தான் இருவரின் சேர்க்கைக்கும் நிபந்தனை. இதைத் தாண்டி இருவரும் சண்டை போட முடியாது.
எனினும் இப்போது கடிவாளம் ஜெயாவிடமே இருக்க வேண்டும் என்பதை இந்த 2012 எபிசோடு காண்பித்திருக்கிறது. மன்னார்குடி கும்பலில் சசிகலாவைத் தவிர அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்து தனது நாட்டாண்மையை ஜெ தெரிவித்திருக்கிறார். கைது வரை போகுமா என்று நினைத்திருந்த மன்னார்குடி கும்பல் இப்போது சிறையிலிருந்தவாறு சமாதான வழிகளைத் தேடி வருகிறது. சேர்ந்தே ஊழல் செய்திருந்தாலும் அதை விசாரணை செய்யும் உரிமையை ஜெயாவே வைத்துக் கொண்டதை எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை. காரணம் அவர் மீதான பார்ப்பன ஊடகங்களின் பக்தி.
ஆக மன்னார்குடி கும்பல் இனி  அடக்கி வாசிக்க வேண்டுமென்பதாக இந்த பிரிவு நாடகம் முடிந்திருக்கிறது. கூடவே சொத்து குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் வேளையில் சசிகலாவின் “அக்கா மேல எந்த தப்புமில்லை” எனும் வாக்குமூலமும் கூட இதில் பங்காற்றியிருக்கக் கூடும். அல்லது இது பேசி வைத்துக் கொண்டதாக இருக்குமென்று சிலர் கூறினாலும் அது முற்றிலும் அப்படி மட்டும் நடந்திருக்க முடியாது. ஏனெனில் மன்னார்குடி கும்பலின் சொத்துரிமையின் மேலாண்மை இப்போது மாறியிருக்கிறது என்பதால் பெங்களூரு வழக்கில் சசிகலா வாக்குமூலம் என்பது தொடர் விளைவுதான். நாடகத்தின் மையக் கதை அல்ல.
அடுத்து ஜெயா ஆட்சிக்கு வந்த எல்லா சமயங்களிலும் அவர் எடுத்த மக்கள் விரோத முடிவுகள், பார்ப்பன பாசிச அடக்குமுறைகள் அனைத்தும் அவரது வர்க்க நலன் சார்ந்து எடுக்கப்பட்ட ஒன்றுதான். அதற்கும் சசிகலாவுக்கும், மன்னார்குடி கும்பலுக்கும் விசேசமான தொடர்புமில்லை. தேவர் சாதிவெறியின் மேலாண்மை மட்டும் மன்னார்குடி கும்பலின் தனிச்சிறப்பு என்றாலும் இதுவும் பார்ப்பன பாசிசத்திற்கு உட்பட்ட ஒன்றுதான். தற்போது “ராமர் பாலம்” எனும் புராணப் புளுகைக்கூட தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதிலிருந்தும் ஜெயாவின் பார்ப்பன விசுவாசத்தை புரிந்து கொள்ளலாம்.
சட்டசபையில் விஜயகாந்த் நாக்கை தள்ளி மிரட்டும் பிரச்சினையில் ஜெயா திமிராக அறிவித்தது நினைவிருக்கிறதா? அதாவது பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு நடக்கும் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தான் அமோக வெற்றி பெறுவேன் என்று அவர் அடித்துச் சொன்னது வெறுமனே தேர்தல் வெற்றி சார்ந்த ஒன்றல்ல. அது அவரது பாசிச திமிரை காட்டுகிறது.
மேலும் ஜெயாவின் ஆட்சி என்பது போலிசு மற்றும் அதிகார வர்க்கத்தினரை மட்டும் நம்பி நடத்தப்படும் சிறு கும்லது ஆட்சி. அவர்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கொடுத்துவிட்டு கிட்டத்தட்ட இராணுவ ஆட்சி போன்றதொரு அமைப்பில் நடத்தப்படும் ஆட்சி. இது ஜெயாவின் தனிப்பட்ட பண்பு என்பதோடு, பொதுவில் பாசிஸ்ட்டுகள் அனைவருக்கும் உள்ள பொதுப்பண்பும் ஆகும். அந்த வகையில்தான் மயிலாப்பூர் கும்பல் இப்போது ஜெயாவின் கிச்சன் கேபினட்டாக அமர்ந்திருக்கிறது. மக்களை அடக்கி ஒடுக்கும் இத்தகைய கட்டுக்கோப்பான ஆட்சிகளைத்தான் தற்போது முதலாளிகள் விரும்புகின்றனர். அதிகரித்து வரும் வாழ்க்கைப் பிரச்சினைகள் மக்களிடையே அமைப்பு ரீதியான எதிர்ப்பாக எழும் போது அதற்கு ஜெயா பாணியிலானா போலிசு ஆட்சிதான் தீர்வு என்பது ஆளும் வர்க்கத்தின் முடிவு.
பரமக்குடி துப்பாக்கி சூடாக இருக்கட்டும், இல்லை கூடங்குளம் மக்கள் மீதான அடக்குமுறையாக இருக்கட்டும் இவையெல்லாம் ஜெயாவின் பேயாட்சி என்பதோடு இந்தியாவுக்கே முன்னுதாரணமாகவும் இருப்பதை ஆளும் வர்க்கங்கள் உணர்ந்தே இருக்கின்றன. அத்தகைய போக்கின் அடையாளமாகத்தான் மயிலாப்பூர் கும்பல் இப்போது அம்மாவை சீராட்டி பாராட்டி வளர்த்து வருகின்றன. இதனால் ஜெயாவின் தனிப்பண்புக்கு இடமில்லை என்பதல்ல. இருவரும் தன்னளவில் ஒரே பார்வை உடையவர்கள். ஒருவேளை மயிலாப்பூர் கும்பல் அந்தப்புறத்தில் இல்லை என்றாலும் ஜெயா அவர்களது அபிலாஷைகளை அவர்கள் சொல்லாமலேயே நிறைவேற்றும் ஆளுமை கொண்டவர். அதே போன்று மயிலாப்பூர் கும்பல் அந்தப்புறத்தில் இல்லை என்றாலும் பார்ப்பன ஊடகங்கள் ஜெயாவை எந்த தருணத்திலும் கை கழுவியது இல்லை.
ஊரறிந்த அவரது திமிரான நடவடிக்கைகள் கூட பார்ப்பன ஊடகங்களில் விமரிசிக்கப்படுவதில்லை. தினமணி வைத்தி மாமாவின் ஜால்ரா தலையங்கங்களே அதற்கு சான்று. ஆனால் இதே சலுகை கருணாநிதிக்கு இல்லை என்பதோடு அவரை தொட்டதுக்கெல்லாம் குத்தி காட்டுவதும் பார்ப்பன ஊடகங்களில் சாதாரணம். இது அரசியலிலும் இருக்கிறது. பாரதிய ஜனதாவோடு கூட்டணி இல்லை என்றாலும் அத்வானி, மோடி போன்றோர் போயஸ் தோட்டத்தில் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமலே வந்து போகும் உரிமை உள்ளவர்கள். அதே போன்று பா.ஜ.கவின் கொள்கைகளை கூட்டணி இல்லாமலே ஆதரிக்கும் பண்பு ஜெயாவிடம் உண்டு.
மன்னார்குடி கும்பலுக்கும், ஜெயாவுக்கும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டை வெளியே தெரியாமல் உள் வட்ட பஞ்சாயத்தில் தீர்த்திருக்கலாமே என்று சிலர் கேட்கலாம். கூடிக் கொள்ளையடிப்பதிலும், சுரண்டுவதிலும்தான் ஆளும் வர்க்கத்தினரிடையே ஒற்றுமை இருக்கும். பங்கு பிரிப்பதில் முரண்பாடு வந்தால் அது வெளியே வந்தே தீரும். இதை 2 ஜி ஊழலிலும், நீரா ராடியா விவகாரத்திலும் பார்த்திருக்கிறோம். தரகு முதலாளிகளுக்கிடையே உள்ள வணிகப் போட்டி காரணமாகவே இந்த ஊழல் வெளியே வந்திருக்கிறது.
அதனால்தான் மன்னார்குடி கும்பலை முற்றிலும் நீக்கிவிட முடியாத நிலையில் ஜெயா இருக்கிறார். சசிகலாவோ, வெறு சில முக்கியமான உறவினர்களோ அனைவரும் ஜெயாவின் அனைத்து விசயங்களையும், அந்தரங்கங்களையும் அறிந்தவர்கள். அந்த அந்தரங்கத்தில் முக்கியமானது ஜெயாவின் ஊழல் சொத்துக்களும் அதன்  இன்றைய நிலைமையும். இதை வெளியே சொன்னால் ஜெயா பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும் இதை வெளியே சொல்வதால் மன்னார்குடி கும்பலும் பெரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவகையில் அது இருவருக்கும் தற்கொலைப் பாதை என்றும் சொல்லலாம்.
வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக மக்கள்தான் தற்கொலை செய்வார்களே ஒழிய முதலாளிகள் மாட்டார்கள். ஏனெனில் வாழ்க்கைப் பிரச்சினைகள் தோற்றுவிக்கும் தன்மானம், நாகரீகம், கௌரவம், அச்சம், நேர்மை போன்ற உணர்ச்சிகளெல்லாம் அதிகார பீடங்களில் இருப்பவர்களுக்கு இல்லை. அவையெல்லாம் மக்கள் திரள் முன்னே அவிழ்த்துப் போடப்படும் முகமூடிகள் என்பதைத்தாண்டி வேறு முக்கியத்துவம் இல்லை. ஆகவே அவர்கள் அடித்துக் கொண்டாலும், கூடிக் கொண்டாலும் அது மக்களிடையே நடப்பதைப் போன்று இருக்காது; இருக்கவும் முடியாது. ஆக ஜெயா சசி கும்பல் தங்களிடையே வரம்பு மீறி சண்டையிடும் தற்கொலைப் பாதையை எப்போதும் எடுக்காது. ஒரு வேளை அப்படி எடுக்கப்படும் பட்சத்தில் ஒரு கும்பல் பூண்டோடு அழிக்கப்படவேண்டியது அவசியம்.
அதற்குத்தான் மயிலாப்பூர் கும்பல் முனைகிறது. என்றாலும் அது அத்தனை சுலபமல்ல. சனிப்பெயர்ச்சியின் போது நீக்கப்பட்ட சசிகலா இப்போது முட்டாள்கள் தினத்தில் சேர்ந்திருக்கிறார். மக்களோ இன்னமும் சனியனை நீங்க முடியாமலும், முட்டாள்தினத்தின் காட்சிகளில் மயங்கியவாறும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நன்றி:http://www.vinavu.com

பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!


நாட்டையும் மக்களையும் மீள முடியாத பேரழிவில் தள்ளாமல் ஓய்வதில்லை எனக் கங்கணம் கட்டிக் கொண்டு மன்மோகன் சிங் கும்பல் வேலை செய்து வருவதைத்தான் இந்த பட்ஜெட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.
குலேபகாவலி என்றொரு பழைய திரைப்படத்தில் இப்படியொரு காட்சி வரும்.  ஒரு வீட்டின் திண்ணையில் உட்காரப் போகும் கதாநாயகனின் நண்பனிடம் அவ்வீட்டின் உரிமையாளர், “திண்ணையில உட்காரதீங்க, அப்புறம் திண்ணை வரி போட்டு விடுவாங்க” என்று எச்சரிப்பார்.  இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் சேவை வரியை விரிவாக்கியதன் மூலம், அப்படிப்பட்டதொரு வரிக் கொள்ளையை, மக்கள் மீது ஏவிவிட்டுள்ளது, மன்மோகன் சிங் அரசு.
தனியார்மயம்  தாராளமயத்தின் பின் அறிமுகப்படுத்தப்பட்ட சேவை வரி, இன்று ஆக்டோபஸ் போல மக்களைச் சுற்றிவளைத்து நெறித்து வருகிறது.  இந்த பட்ஜெட்டில் 17 இனங்களைத் தவிர, மற்ற அனைத்தையும், ஏறத்தாழ 119 இனங்களைச் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள மைய அரசு, அவ்வரி விதிப்பையும் 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்திவிட்டது.  சேவை வரியோடு, சுங்க வரி, உற்பத்தி வரிகளையும் உயர்த்தியிருப்பதன் மூலம், கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக 45,940 கோடி ரூபாயைப் பொதுமக்களிடமிருந்து கறந்துவிடும்படி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம் !இவ்வரிக் கொள்ளை ஒருபுறமிருக்க, பெட்ரோலியப் பொருட்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தில் 25,000 கோடி ரூபாயையும், யூரியாவிற்குக் கொடுத்து வந்த மானியத்தில் 7,000 கோடி ரூபாயையும் வெட்டித் தள்ளியதன் மூலமும்; 30,000 கோடி ரூபாய் அளவிற்குப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார் முதலாளிகளுக்கு விற்பதன் மூலமும் கஜானாவை நிரப்பிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு.
மன்மோகன் சிங் கும்பல் சாமானிய மக்களை என்றுமே ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.  அக்கும்பல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்தாததோடு, அப்பொருட்களின் விலை மேலும் உயரும் எனத் தெரிந்தேதான், எரிகிற நெருப்பில் எண்ணெயை எடுத்து ஊற்றுவது போலத்தான், இந்தக் கூடுதல் வரி விதிப்பையும் மானிய வெட்டையும் கொண்டு வந்திருக்கிறது; இது மட்டுமின்றி, பட்ஜெட்டை அறிவித்த கையோடு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதாகவும் திமிரோடு அறிவித்திருக்கிறது.
விவசாய இடுபொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரி வரும் வேளையில், மன்மோகன் சிங் கும்பல் அக்கோரிக்கையை ஒரு பொருட்டாக மதிக்காமல், தெனாவட்டாக யூரியாவிற்கான மானியத்தை வெட்டியிருக்கிறது.  இதுவொருபுறமிருக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாவட்டங்களில் யூரியாவிற்கான மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தையும் இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.  இந்நடவடிக்கை, யூரியாவின் விலையை கார்ப்பரேட் முதலாளிகளும் வர்த்தகச் சூதாடிகளும் தீர்மானிக்கும்படி விட்டுவிடும் முன்னோட்டம் தவிர வேறில்லை.  அம்மோனியா, பொட்டாசியம் உரங்களுக்கு மானியம் வழங்குவதையும், அவற்றின் விலையைத் தீர்மானிப்பதையும் நேரடியாகக் கைகழுவிய மைய அரசு, யூரியா விசயத்தில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் சதியில் இறங்கியிருக்கிறது.  இப்படியொரு நிலை இந்தியா முழுவதும் விரிவாக்கப்படும்பொழுது யூரியாவிற்கு மானியம் வழங்குவது பெயரளவில் மட்டுமே இருக்கும்; அதே சமயம், யூரியாவின் விலையில் பெரும்பகுதி விவசாயிகளின் தலையில் சுமத்தப்படும்.
‘‘அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்” என பட்ஜெட் உரையில் கொள்கைப் பிரகடனம் செய்திருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.  இதற்கு இராணுவச் செலவு உள்ளிட்ட அரசின் ஊதாரிச் செலவுகளையும் மேல்தட்டு கும்பலுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் வரித் தள்ளுபடி, வரிச் சலுகைகளையும் கட்டுப்படுத்தினாலே, அரசின் செலவைக் குறைத்துவிட முடியும்.  ஆனால், வழக்கம் போலவே இந்த பட்ஜெட்டும் மேல்தட்டுக் கும்பலின் நலனை முன்னிறுத்தியும், உழைக்கும் மக்களின் நலனைப் பலியிட்டும்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,93,407 கோடி ரூபாய் நிதியில், 79,500 கோடி ரூபாய் ஆயுதங்களும் நவீன போர் விமானங்களும் வாங்க ஒதுக்கப்பட்டுள்ளது.  ஊழலில் ஊறிப் போன அதிகாரிகளுக்கும் ஆயுத பேரத் தரகர்களுக்கும் இதைவிட இனிப்பான செய்தி வேறெதுவும் இருக்க முடியாது.
நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு 4,500 கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரிச் சலுகையினை வாரி வழங்கியிருக்கிறார், நிதியமைச்சர்.  உழைக்கும் மக்களுக்கு மானிய விலையிலோ இலவசமாகவோ அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை ஓட்டுவங்கி அரசியல் எனத் திட்டித் தீர்க்கும் இக்கும்பல், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த வருமான வரிச் சலுகை போதாது எனக் கூப்பாடு போடுகிறது.
இந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 5,21,980 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், கடந்த ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 5,29,432 கோடி ரூபாய்க்கான வரிச் சலுகைகளுள் ஒன்றைக்கூட நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் ரத்து செய்யவில்லை. நிதிப் பற்றாக்குறை பூதகரமாக வளர்ந்து நிற்பதற்கு இந்த ஊரான் வீட்டு நெய்யே என்ற வள்ளல்தனம்தான் காரணம்.  ஆனால், பற்றாக்குறையைச் சமாளிக்க மானியத்தை வெட்டிய கையோடு, தொழிலாளர் வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த வட்டியை 9.5 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாகக் குறைத்து, 4.5 கோடி தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் களவாடிவிட்டது, காங்கிரசு கூட்டணி அரசு.  இந்த வட்டிக் குறைப்பு மன்மோகன் சிங் கும்பலின் வக்கிரப் புத்தியையும் அற்பத்தனத்தையும் ஒருசேர எடுத்துக் காட்டுகிறது.
பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம் !திருவாளர் மன்மோகன் சிங் சமீபத்தில், “இந்தியாவில் உள்ள குழந்தைகளுள் 42 சதவீதத்தினர் ஊட்டச்சத்து இன்றி நோஞ்சான்களாக வளருவதாகவும், இதுவொரு தேசிய அவமானம்” என்றும் கூறினார்.  அடித்தட்டு மக்களை எந்தளவிற்கு வறுமையும் ஏழ்மையும் வாட்டி வருகின்றன என்பதை உறுதிப்படுத்தும் புள்ளிவிவரம் இது.  மன்மோகன் சிங் திடீர் ஞானோதயம் வாய்த்தவரைப் போல இப்படிக் கூறியிருக்கும் அதே சமயம், அவரது அல்லக்கையும் திட்ட கமிசனின் துணைத் தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா, “நகர்ப்புறத்தில் தனிநபர் வருமானம் நாளொன்றுக்கு ரூ.28.65க்குக் கீழாகவும், கிராமப்புறத்தில் தனிநபர் வருமானம் ரூ.22.42க்குக் கீழாகவும் இருப்பதுதான் வறுமைக் கோட்டின் அளவுகோல்.  இதன்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் இந்திய மக்களின் எண்ணிக்கை 37.2 விழுக்காட்டிலிருந்து 29.8 விழுக்காடாகக் குறைந்துவிட்டதென” தற்பொழுது தடாலடியாக அறிவித்திருக்கிறார்.  ஒருபுறம் நோஞ்சான் குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடித்துவிட்டு, மறுபுறம் வறியவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டதாகக் கணக்குக் காட்டுவது எப்பேர்பட்ட கயமைத்தனம்!
திட்ட கமிசன் தற்போது அறிவித்துள்ள வறுமைக் கோட்டின் அளவுகோல், அக்கமிசன் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்த அளவுகோலைவிட, ஏறத்தாழ நான்கு ரூபாய் குறைவானது.  விலைவாசி உயர்ந்துகொண்டே செல்லும் சமயத்தில், வறியவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வறுமைக் கோட்டின் அளவுகோலை வெட்டும் சில்லறைத்தனமான குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது, மன்மோகன்  அலுவாலியா கும்பல்.  இந்தக் குறுக்குப்புத்திக்கு எதிராக நாடெங்கும் கண்டனங்கள் எழுந்த பிறகும் அதைப் பொருட்படுத்தாத அலுவாலியா, “இந்தக் கணக்கு வேண்டுமானால் துல்லியம் இல்லாமல் இருக்கலாம்.  நாட்டில் வறுமை குறைந்திருக்கிறது.  பட்டினிச் சாவுகள் இல்லை என்பது உண்மையே” என இறுமாப்பாகப் பதில் அளித்திருக்கிறார்.
மன்மோகன்  அலுவாலியா  சிதம்பரம் கும்பல் தேர்ந்தெடுத்து அமல்படுத்தி வரும் பொருளாதார வளர்ச்சிப் பாதை, வறுமை, ஏழ்மை, சமூக ஏற்றத்தாழ்வை மட்டும் தீவிரமாக்கவில்லை; நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து நாசப்படுத்தி வருகிறது.  குறிப்பாக, நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர்கள் எதிர்பார்த்த 8 சதவீத வளர்ச்சியை எட்டமுடியாமல் முடங்கிப் போய்விட்டது.  விவசாயம் போலவே, உற்பத்தி சார்ந்த தொழிற்துறையும் நீண்ட கோமா நிலைக்குச் சென்றுவிட்டது.  இவையனைத்தும் தனியார்மயம்  தாராளமயம் மிகப்பெரும் தோல்வி அடைந்துவிட்டது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
ஆனால், மன்மோகன் சிங் கும்பல் மண்ணுக்குள் தலை புதைக்கும் நெருப்புக் கோழியைப் போல, இந்த உண்மையைக் காண மறுப்பதோடு, தனியார்மயம்  தாராளமயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் இந்த நெருக்கடியிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற ஆகாயக் கோட்டையைக் கட்டி காட்டுகிறது.  இந்தச் செக்குமாட்டுத் தனத்தற்கு ஏற்றபடியே, பட்ஜெட்டில் நிதி மூலதனத்திற்கும், பங்குச் சந்தை முதலீட்டிற்கும், விமான சேவை, மின்சாரம் போன்ற துறைகளில் நுழைந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.  பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தாமல்,  சில்லறை வணிகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது உள்ளிட்டுப்பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.
நாட்டையும் மக்களையும் மீள முடியாத பேரழிவில் தள்ளாமல் ஓய்வதில்லை எனக் கங்கணம் கட்டிக் கொண்டு மன்மோகன் சிங் கும்பல் வேலை செய்து வருவதைத்தான் இந்த பட்ஜெட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.  ஆனால், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, துடப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது போல, “பட்ஜெட்டில் இந்த அளவிற்கு மானியத்தை வெட்டியிருக்கத் தேவையில்லை; மக்கள் நலத் திட்டங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்கலாம்” என ஆலோசனைகளை அள்ளிவிட்டு வருகிறார்கள்.
நன்றி:http://www.vinavu.com

மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்!


ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப், 20, 30 ரூபாய்க்கு பெட்ரோல் போட எப்படி பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம்.
மின்-கட்டண-உயர்வு
மின் வாரியம் கூறும் கட்டணத்தைத் தரத் தயாராக இருப்பவர்களுக்கும் மின்சாரம் கிடைப்பதில்லை என்பதுதான்  மின்வெட்டு என்று கூறப்படுகிறது. கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த மின்வெட்டை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அரசு சொல்கிறது. மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும் இந்தப் பற்றாக்குறையை ‘முடிவுக்கு’ கொண்டு வரலாம்.
பாட்டில் தண்ணீரும் கேன் தண்ணீரும் தண்ணீர் பஞ்சத்தை இப்படித்தான் ‘ஒழித்திருக்கின்றன’. குடிதண்ணீர் வாங்க காசில்லை என்ற பிரச்சினையை தண்ணீர் பற்றாக்குறை என்று யாரும் சொல்வதில்லை. அது பணப்பற்றாக்குறையாகிவிடுகிறது.
ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப் செய்வதைப் போல, 20, 30  ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொள்வதற்கும் எப்படி இன்று பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம். மின்சாரம் என்பது கத்தரிக்காயைப் போல அன்றாடம் சந்தையில் விலை மாறும் சரக்காகி வருகிறது. இந்த மாற்றம் வெகு வேகமாக நம்மீதும் திணிக்கப்படுகிறது.
டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ‘ஸ்மார்ட் மீட்டர்’ என்ற மின்சார மீட்டரை அறிமுகப்படுத்தவிருக்கிறதாம். காலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை என்ன என்பதை இந்த மீட்டரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியுமாம். அதாவது, வரவிருக்கும் காலத்தில் மின் கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கோ, ஒரு நாளுக்கோ கூட நிரந்தரமாக இருக்காது. மின்சாரச் சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். மின்சாரத்தின் விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டை தவிர்த்துக் கொண்டு, விலை குறைவாக இருக்கும் நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டண செலவைக் கட்டுப்படுத்த முடியும். இது மின்சாரத்துறையில் செய்யப்படும் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தமாகும் என்று கூறியிருக்கிறார் டில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பி.டி.சுதாகர். (பி.டி.ஐ; 26.2.12)
மைய அரசு அமைத்திருக்கும் ‘இந்தியா ஸ்மார்ட் கிரிட் டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, மின்சார மீட்டரை ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும் இந்த ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் இந்தியா முழுவதற்கும் பத்து கோடி தேவையென்றும், அவற்றை மலிவு விலையில் உருவாக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் கூறியிருக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக புதுச்சேரி நகரிலுள்ள 87,000 வீடுகளில் அடுத்த நான்கு மாதங்களில் இந்த மீட்டர்கள் நிறுவப்படும் என்று இந்த டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பு அறிவித்திருக்கிறது. (ஐ.பி.என். லைவ், மார்ச் 3, 2012)
மின் விநியோகத்தின் மீதான மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், மின் திருட்டைத் தடுக்கும் முயற்சி, மின் செலவை மிச்சப்படுத்த மக்களுக்கு தரப்படும் வாய்ப்பு என்ற வார்த்தை ஜாலங்களால் இந்த திட்டத்தை நியாயப்படுத்துகிறது அரசு. உண்மை அதுவல்ல.  மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வது என்ற முறையையே ஒழித்துவிட்டு, சந்தையில் மின்சாரத்தின் விலை என்னவோ அதைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பதற்கு மக்களைப் பழக்குவதே இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் நோக்கம்.
28.3.2012 அன்று சட்டசபையில் மின்கட்டண உயர்வு தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மாநில மின்வாரியம் கோராவிட்டாலும்கூட, கட்டணத்தை உயர்த்துகின்ற அதிகாரம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உண்டு என்று ஒரு விளக்கமளித்தார்.
மின்-கட்டண-உயர்வுதன்னுடைய அரசு அறிவித்திருக்கும் கட்டண உயர்வுக்கு, தான் பொறுப்பேற்றுக் கொள்ளாமல், வேறு யாரோ வைத்த செய்வினை போல ஜெயலலிதா சித்தரிக்கிறார் என்ற போதிலும், அப்படிப்பட்ட அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருப்பது உண்மையே.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.  கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியவை மாநில அரசிடமிருந்து பிடுங்கி சுய அதிகாரம் பெற்ற அமைப்பான இதனிடம் வழங்கப்பட்டுவிட்டன.  இதற்கான சட்டம் 1998இலேயே இயற்றப்பட்டுவிட்டது.
மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டம் போதுமானதாக இல்லை என்பதால் 2003இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் மத்திய மின்சாரச் சட்டம் இயற்றப்பட்டது.  இச்சட்டம், மின் உற்பத்தி  கம்பிகள் மூலம் கொண்டு செல்லுதல்  நுகர்வோருக்கு விநியோகித்தல் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்வது திறமையின்மைக்கும் ஏகபோகத்துக்கும் வழிவகுப்பதால், வாரியங்களை மூன்றாக உடைக்கக் கூறியது. மின்சாரம் வணிக ரீதியில் விற்கப்படவேண்டும் என்றும், மின்சாரம்  உற்பத்தி செய்ய அரசாங்க உரிமம் தேவையில்லை என்றும், தனியார் முதலாளிகள் மின்னுற்பத்தி செய்வதுடன் மின்சாரச் சந்தையில் ஊக வணிக சூதாட்டமும் நடத்தலாம் என்றும் அனுமதித்தது. மின்வாரியங்கள் சொந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யுமாறும், விநியோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியது. தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்கின்ற மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் ஆணையத்திடமே தரப்பட்டது. கட்டண உயர்வுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை நாடவியலாதென்றும், இதற்கென உருவாக்கப்படும் ‘மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையம்’தான் தீர்ப்பளிக்க முடியும் என்றும் இச்சட்டம் கூறியது.
மின் உற்பத்தியிலிருந்து மாநில மின்வாரியங்கள் திட்டமிட்டே அகற்றப்பட்டன.  மின்சாரத் துறைக்கான நிதி, மாநில அரசுகளின் திட்ட ஒதுக்கீட்டில் 31.55 விழுக்காட்டிலிருந்து (199091) பத்தே ஆண்டுகளில் 15.25 விழுக்காடாக (200102) வீழ்ச்சி அடைந்தது. இலாபமீட்டி வந்த மின் வாரியங்கள் நட்டத்தில் விழத் தொடங்கின.
மின் வாரியங்கள் நட்டத்தில் விழுவதற்கான காரணமே, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் என்ற கருத்தை அரசும், ஊடகங்களும் திட்டமிட்டே உருவாக்கியிருக்கின்றன. 1994-95இல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ. 347 கோடி. 2007-08 ஆம் ஆண்டில் இது 3512 கோடி ரூபாய் பற்றாக்குறையாக மாறியது. 1994 இலும் சரி, 2008 இலும் சரி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுத்தான் வருகிறது. நட்டத்திற்கு காரணம் அதுவல்ல.
1994 இல் தனது மின்சாரத் தேவையில் 0.4 சதவீதத்தை மட்டுமே தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக மின்வாரியம், 2008  இல் சுமார் 35% மின்சாரத்தைத் தனியாரிடம் வாங்கியது. இன்று தமிழக மின்வாரியத்தின் கடன் சுமார் ரூ.56,000 கோடி. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
“போட்டி இருந்தால் விலை குறையும். சேவைத்தரம் உயரும்” என்பதுதான், அரசுத்துறைகளை ஒழிப்பதற்கும், தனியார் துறையை ஊக்குவிப்பதற்கும் சொல்லப்படுகின்ற காரணம்.  மின்சாரத்துறையில் தனியார் அனுமதிக்கப்பட்ட பிறகு கட்டணம் குறையவில்லை. மாறாக, ஏறிக்கொண்டிருக்கிறது. மின் வாரியத்தை நட்டத்திலிருந்து காப்பாற்றத்தான் இந்த கட்டண உயர்வு என்று அரசு கூறினாலும் உண்மை அதுவல்ல.
தனியார் மின் உற்பத்தியாளர்களுடன் மின்வாரியங்கள் போட்டிருக்கும் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களின்படி, அந்த முதலாளிகளுக்குத் தரவேண்டிய தொகையைத் தருவதற்கு கட்டண உயர்வு அவசியம் என்று மத்திய மின்சார அமைச்சகத்தின் 21.1.2011 தேதியிட்ட கடிதம் தெளிவாகக் கூறுகிறது. (ஆதாரம் : ‘மின்சாரக் கட்டணம் தனியார்துறையின் வேட்டைக்காடு’, சா.காந்தி, ஒய்வு பெற்ற பொறியாளர்)
மின்-கட்டண-உயர்வுமின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் (Power Purchase Agreement) என்பதென்ன? தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு மாநில மின்வாரியங்கள் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தங்கள் இவை. இவற்றின்படி, ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலை என்பதும் எத்தனை மாதங்களுக்கு அந்த விலையில் மின்சாரத்தை தரவேண்டும்/பெற வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டுவிடும்.  மின்சாரத்தின் விலையை இருதரப்பினரும் பேசித் தீர்மானிப்பர்.
இந்த வகை ஒப்பந்தங்களில் மிகவும் இழிபுகழ் பெற்றது என்ரான் ஒப்பந்தம். 90களில் தபோல் மின்நிலையத்திலிருந்து ஒரு யூனிட்  8 ரூபாய் விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டு விட்டு, அந்த விலைக்கு மின்சாரம் வாங்க முடியாமல், மின்சார உற்பத்தியை நிறுத்தி வைப்பதற்காக மாதந்தோறும் நிலைக்கட்டணம் செலுத்தியே திவாலானது மகாராட்டிர அரசு.
தமிழகத்தில் அப்போலோ (மருத்துவமனை) குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைப்பெருமாநல்லூர் மின்நிலையத்திலிருந்து 2005-06  இல் தமிழக அரசு வாங்கிய மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.17.78.  சாமல்பட்டி பவர் என்ற நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ. 8.74; மதுரை பவர்  ரூ. 8.63. சென்னை பேசின் பிரிட்ஜில் மின் வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கும் ஜி.எம்.ஆர். என்ற தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.6.58.  யூனிட்டுக்கு ரூ. 17.74 கொடுத்து அப்போலோ நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06  இல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் 330 கோடி ரூபாயை  கொடுத்திருக்கிறது மின்வாரியம்.(காந்தி, மேற்படிநூல்)
தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள். அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ.2.14 காசுகள் என்பதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக மின் வாரியத்தின் 56,000 கோடி ரூபாய் கடனும், அதனைக் கட்டுவதற்கு  நாம் தரப்போகும் கூடுதல் கட்டணமும் அரசுக்குப் போகவில்லை. நேரே முதலாளிகளின் பணப்பெட்டிக்குத்தான் போய்ச் சேர்கிறது.
ஒப்பந்தம் செய்த விலையில் ஒப்பந்தப்படி மின்சாரம் வாங்கவில்லையென்றால், தங்களது மின் நிலையங்கள் இயங்காமல் சும்மா இருப்பதற்கே அபராதக் கட்டணம் வசூலித்து மின்வாரியத்தைத் திவாலாக்கும் கறார் பேர்வழிகளான தனியார் முதலாளிகள், தமது தரப்பில் ஒப்பந்தங்களை மதிக்கிறார்களா?
ஒரு யூனிட் 2.26 காசுக்கு மின்சாரம் சப்ளை செய்வதாக ஏலம் கேட்டு, டாடாவுக்குச் சொந்தமான முந்திரா அல்ட்ரா மெகா பிராஜக்ட் என்ற 4000 மெகாவாட் அனல் மின்நிலையம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இதற்கான நிலக்கரியை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. இப்போது நிலக்கரியின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டதால், தான் ஏலம் கேட்ட விலையில் மின்சாரம் தர முடியாது என்றும் விலையைக் கூட்டவேண்டும் என்றும் கோருகிறது டாடா நிறுவனம். இந்தோனேசியாவில் உள்ள அந்த சுரங்கங்களும் டாடாவுக்கு சொந்தமானவையே என்பதால், மின்சாரத்தின் விலையைக் கூட்ட மறுக்கின்றன மாநில மின்வாரியங்கள்.
“மின்சாரத்தின் விலையைக் கூட்டித்தர மறுத்தால் மின்நிலையத்தை மூடுவோம். திவாலாகப்போவது நாங்கள் அல்ல, எங்களுக்கு கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள்தான். பரவாயில்லையா?” என்று தெனாவெட்டாக அரசை மிரட்டுகிறார் டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அனில் சர்தானா. (எகனாமிக் டைம்ஸ், 5.2.2012)
தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், மின் வாரியங்களுக்கும் சுமார் 4 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கிகளோ, தங்களைத் திவால் ஆகாமல் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, மின் கட்டணத்தை உயர்த்துமாறு ஆணையத்திடம் முறையிடுகின்றன.
இன்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி அனல் மின் உற்பத்தியே. இதற்குத் தேவையான நிலக்கரியை பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா தருகிறது. குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக மின்வாரியங்களுக்குச் சொந்தமான அனல் மின்நிலையங்களுக்குச் சலுகை விலையில் கரியை விற்கிறது கோல் இந்தியா. கோல் இந்தியா தருகின்ற நிலக்கரி போதாமல், கணிசமான அளவு நிலக்கரியை பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன.
மின்-கட்டண-உயர்வுதற்போது உலகச் சந்தையில் நிலக்கரியின் விலை உயர்ந்து விட்டதைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கை சந்தித்த டாடா, அம்பானி, ஜின்டால், அதானி உள்ளிட்ட தரகுப் பெருமுதலாளிகள், “மின்சாரத்தின் விலையை உயர்த்துங்கள், அல்லது நிலக்கரியைச் சலுகை விலையில் வழங்குங்கள். இல்லையேல் அனல் மின் நிலையங்களை மூடவேண்டிவரும்” என்று அன்புடன் மிரட்டியுள்ளனர். உடனே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கூட்டிய மன்மோகன்சிங், முதலாளிகளுக்குத் தேவையான நிலக்கரியை வெட்டி எடுத்தோ, இறக்குமதி செய்தோ கொடுக்க வேண்டியது கோல் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பென்றும், ஒப்புக்கொண்டதில் 80% நிலக்கரியைத் தரத் தவறினால் முதலாளிகளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். உள்நாட்டு நிலக்கரியை குறைந்த விலையில் விற்பது மட்டுமல்ல; இறக்குமதி செய்து, தள்ளுபடி விலையில் இம்முதலாளிகளுக்கு விற்க வேண்டும்.
டாடாவுக்கு  இந்தோனேசியாவிலும், அதானிக்கு ஆஸ்திரேலியாவிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. இந்தோனேசிய டாடாவிடமிருந்து அதிக விலைக்கு வாங்கி, இந்திய டாடாவுக்கு மானிய விலையில் நிலக்கரி விற்பனை! இதற்குப் பெயர் சுதந்திரப் போட்டி, மானியங்களை அகற்றுதல்!
இது மட்டுமல்ல, வரவிருக்கும் 6 ஆண்டுகளில் நிறுவப்படவுள்ள 40,000 மெகாவாட் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரிச் சுரங்கங்கள் தரகு முதலாளிகளுக்கு ‘சும்மா’ தூக்கித் தரப்பட்டிருக்கின்றன. இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சந்தை விலையில் விற்று லாபம் பார்க்கப்போகிறார்கள். (பிசினெஸ் லைன், 15.3.2011)
தனியார் மின் உற்பத்தியாளர்களில் இரு பிரிவினர் உண்டு. உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் குறிப்பிட்ட மின்வாரியத்துக்கோ, ஆலைக்கோ,  சில ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட விலையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு, விற்பனை செய்பவர்கள்   சுயேச்சையான மின் உற்பத்தியாளர்கள் (Independent Power Producers).
இத்தகைய ஒப்பந்தங்கள் ஏதுமில்லாமல் சந்தையில் அன்றன்றைக்கு நிலவும் மின்சாரத் தேவையின் அடிப்படையில், மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்பவர்கள் வணிக மின் உற்பத்தியாளர்கள் (Mercantile Power Corporations). ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 17 ரூபாய்க்கும் மேல் கூடப் போவதுண்டு. இதற்கு உச்சவரம்பு ஏதும் கிடையாது.  இத்தகைய தனியார் பிணந்தின்னிகளிடம் மின்சாரம் வாங்கித்தான் தமிழக மின்வாரியம் திவாலாகியிருக்கிறது. சான்றாக, 2009-10  இல்  தமிழக மின்வாரியம், தனது மொத்த மின் தேவையில் 19 விழுக்காட்டை  வணிக மின் உற்பத்தியாளர்களிடம் வாங்கிவிட்டு, அதற்கு விலையாக தனது மொத்த வருவாயில் 49.45 விழுக்காட்டை கொடுத்திருக்கிறது.
இன்று 16,000 மெகாவாட் உற்பத்தியுடன் இந்திய மின் சந்தையின் 10%ஐ இவர்கள் கட்டுப்படுத்துகின்றனர். அடுத்த சில ஆண்டுகளுக்குள் மேலும் 40,000 மெகாவாட் இவர்களது பிடிக்குள் வர இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய குறுகிய கால பிணந்தின்னி மின்சந்தை இந்தியச் சந்தைதான். இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அக். 2008 முதல் ‘பவர் எக்ஸ்சேஞ்ஜ் ஆப் இந்தியா’ என்ற ஆன்லைன் சந்தை தொடங்கப்பட்டு, இதில் சூதாடப்படும் பண்டமாக மின்சாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொடங்கி மூன்றாவது ஆண்டிலேயே 1000 கோடி யூனிட்டுகளுக்கு மேற்பட்ட மின்சாரம் இந்தச் சந்தையில் சூதாடப்பட்டிருக்கிறது என்று பெருமை பொங்க அறிவித்திருக்கிறார் மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் கே.சி.வேணுகோபால்.
தனியார் அணுமின் நிலையங்களும் அனுமதிக்கப்பட இருக்கின்றன. ரிலையன்ஸ் எனர்ஜி, டாடா பவர், லார்சன் அண்டு டூப்ரோ போன்ற நிறுவனங்கள் பிரான்சின் அரேவா, ஜப்பானிய தோஷிபா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை வருகின்றன. இந்திய அணுசக்திக்கழகத்தின் (NPCIL) முன்னாள் தலைவர் வி.கே.சதுர்வேதி ரிலையன்ஸிலும், எஸ்.ஏ.வோரா என்ற முன்னாள் இயக்குநர் டாடா பவர் நிறுவனத்திலும் பொறுப்பேற்றிருக்கின்றனர்.  (அவுட்லுக், 22 அக்; 2007)
சூரிய ஒளி, காற்றாலை போன்ற மாற்று மின்சார முயற்சிகளும்கூட,  பெரும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களிடமே தரப்படுகின்றன. அவர்களுக்கு  மானியங்களை வாரி வழங்குவதுடன், அவர்கள் தயாரிக்கும் மின்சாரத்தையும் அடாத விலை கொடுத்து வாங்குகின்றன மின்வாரியங்கள். தமிழக மின்வாரியம் காற்றாலைகளுக்கு வைத்திருக்கும் கடன் மட்டும் 1500 கோடி ரூபாய்.
தற்போது 77% மின்சாரத்தை மத்திய, மாநில அரசு மின்நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. 23% தனியார் உற்பத்தி.  அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தனியார் முதலாளிகளின் பங்கை 60% ஆக உயர்த்தவிருப்பதாகக் கூறி அமெரிக்க முதலீட்டாளர்களை வரவேற்றிருக்கிறார் மத்திய மின்சார அமைச்சர் ஷிண்டே.
மின் உற்பத்தி மட்டுமல்ல, மின் விநியோகமும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. டில்லி மின்விநியோக நிறுவனத்தின் பெயர், டாடா பவர் கம்பெனி என்றே மாற்றப்பட்டுவிட்டது.  உற்பத்தி, விநியோகம் இரண்டையும் அரசு மின்வாரியமே செய்வது ஏகபோகம் என்று கூறி, மாநில மின் வாரியங்களை உடைத்திருக்கும் அரசு, டாடாஅம்பானிகளின் நிறுவனங்கள் உற்பத்தியிலும் விநியோகத்திலும் மட்டுமின்றி எரிபொருளிலும்  தரகு முதலாளிகள் ஏகபோகம் செலுத்துவதை கேள்விக்குள்ளாக்கவில்லை.
மின்-கட்டண-உயர்வுஇருப்பினும், மோசமான சேவை, அசாத்தியமான கட்டண உயர்வு ஆகிவற்றால் தனியார் சேவை பல்லிளித்துவிட்டது. ஆத்திரம் கொண்ட டில்லி, மும்பை மக்கள் மீண்டும் அரசு மின்வாரியம் கோரிப் போராடுகின்றனர்.
மைய அரசு அமைத்திருக்கும் சுங்லு கமிட்டியோ, மின் தட இழப்பைக் குறைப்பதற்கு, மின் விநியோகத்தை மின்வாரியங்களிடமிருந்து பறித்து, அதைத் தனியார் முகவர்களுக்கு (Franchisee) கொடுக்குமாறும், கம்பிகள் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை 25 ஆண்டுகளுக்கு இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களை அனுமதிக்குமாறும் ஆலோசனை கூறியிருக்கிறது. பேருந்துநிலைய கக்கூசை ஏலம் விடுவது போல, 255 நகரங்களின் மின் விநியோகத்தை ஏலம் விட்டு அரசாங்கம் கல்லா கட்டிவிடலாம் என்றும், அந்த ஏலதாரர்கள் மக்களிடம் வசூலித்துக் கொள்ளட்டும் என்றும் ஆலோசனை கூறியிருக்கிறது. பஞ்சாப், ஹரியானாவில் 31 நகரங்களில் முன்னோட்டமாக இது அமல்படுத்தப்பட இருக்கிறது. (இந்தியன் பவர் செக்டார், 10.2.2012)நெடுஞ்சாலைத் துறை டோல்கேட்டுகள் வசூலில் வெற்றியடைந்திருப்பதால், அதே முறையிலான தனியார்துறைபொதுத்துறை கூட்டினை மின் விநியோகத்திலும் அமல்படுத்தலாமென்றும் அரசு சிந்தித்து வருகிறது. மின் கட்டண வசூலை உத்திரவாதப்படுத்த, ஸ்மார்ட் மீட்டருடன் ப்ரீ பெய்டு கார்டு முறையை இணைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறார்கள்.
தெற்காசியா முழுவதற்கும் 30,000 கோடி டாலர் செலவில் ஒரு மின் விநியோக வலைப்பின்னலை அமைத்து, ஒரே மின்சாரச் சந்தையின் கீழ் தெற்காசியாவின் எல்லா நாடுகளையும் கொண்டுவரவேண்டும் என்பதும் இந்தியத் தரகுமுதலாளிகளின் வேட்கை. தெற்காசிய சுதந்திர வர்த்தக வலயத்துக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா இதனைக் கூறினார். இத்திட்டத்தின் அடிப்படையில்தான் இந்திய-இலங்கை கடல்வழி மின்தடம் அமைக்கப்பட இருக்கிறது.
இன்று நாம் சந்திக்கும் பிரச்சினையை மின் உற்பத்திப் பற்றாக்குறை தோற்றுவிக்கும் நெருக்கடி என்று மட்டும் குறுக்கிப் புரிந்து கொள்ள கூடாது. குஜராத்திடம் 2000 மெகாவாட் மின்சாரம் உபரியாக விற்க வழியில்லாமல் உள்ளது. முதலாளித்துவ பொருளாதாரத்தில் பற்றாக்குறையைக் காட்டிலும் அபாயகரமான பிரச்சினை உபரி.
நாளை தமிழகம் மின் உபரி மாநிலமாகலாம். ஆனால் அந்த உபரி, சாதாரண மக்களின் மின்சாரப் பற்றாக்குறையை அதிகரிக்கும். இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் பிதுங்கி வழியும் தானியம்,  மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து வருவதைப் போல.
உணவுபட்டினியைத் தோற்றுவிக்கும். மின்சாரம் இருட்டையும் தோற்றுவிக்கும்.
நன்றி:http://www.vinavu.com