உண்மைசுடும்

Tuesday, 14 February 2012

காதலர் தின கொண்டாட்டம்- கலாச்சார சீர்கேடா? சமூக சீர்திருத்தமா?


காதலை நேசிப்போருக்கு மட்டுமே உரிய நாள் அல்ல பிப்ரவரி 14!
சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற “ஆதலினால் காதல் செய்வீர்” என்று மலர்க்கொடி தூக்குவோரும் “அய்யோ! சமூகக் கட்டுமானம் சரிந்து போகிறதே” என்று கலாச்சார காவலர்களாக அவதரிப்போரும் உச்சரிக்கும் நாளும்கூட!
காதலர் தினத்தின் பின்னனி
காதலர்களை இணைத்து வைத்ததற்காக மரித்துப் போன பாதிரியாரின் நினைவுநாள்தான் பிப்ரவரி 14. கி.பி. 3-ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ் காலத்து காதல் கதை!
திருமணத்துக்கு தடைவிதித்து பேரரசன் பிறப்பித்த ஆணையை மீறி காதலர்களை இணைத்து வைத்ததற்காக மரணதண்டனைப் பெற்ற பாதிரியாரின் பெயர்தான் வேலன்டைன்ஸ்!
கி.பி.5-ம் நூற்றாண்டு வரை கிறித்துவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு விடுமுறை நாளாக அனுசரிக்கப்பட்ட வரலாறும் இருந்திருக்கிறது. மேற்குலக நாடுகளில் மட்டுமே கடைபிடிக்கப்பட்ட பிப்ரவரி 14- காதலர் தினம் என்பது இந்தியாவின் தாராளமயப் பொருளாதாரக் கதவுகள் திறக்கப்பட்ட காலத்தில் குடியேறிவிட்டது.
ஆண்டுதோறும் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டத்தைப் போல் இளைஞர் பட்டாளம் கூத்தாடி மகிழ்கிற ஒரு நாளாகிவிட்டது.
காதல்
ஆதாம்-ஏவாள் காலத்திலிருந்து இன்றைய இளசுகள் வரை காதலை சுமக்காத தலைமுறையே இருந்தது இல்லை. சீர்திருத்தம், புரட்சி பேசிய போராளிகள் காதலை நேசிக்காமல் இருந்தது இல்லை. ஆன்மீகம், தத்துவம் பேசியவர்களும் காதலிலிருந்து விலக்குப் பெற்றுவிடவில்லை.
“‘தொடுதலும், புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச்சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.’ -
“‘தருதலும் பெறுதலுமற்ற கருணைப் பெருவெளியில் சிறகுச்சிக்கலின்றிப் பறத்தலே காதல்! முழு விடுதலையை மூச்சிழுத்துப் பூப்பதுதான் காதல்.’ இவை கவிஞர் அறிவுமதியின் வரிகள்.
ரசிக்க வேண்டிய, அனுபவிக்க வேண்டிய ஒரு மென்தன்மையான காதலைக் கொண்டாடுவது என்பது இப்போது வன்முறை வெடிக்கும் ஒரு நாளாக விஸ்வரூபமெடுத்துவிட்டதுதான் காதலுக்கு நேர்ந்த சோகம்!
காதலர் தினத்தின் விஸ்வரூபம்
உலக நாடுகளிலேயே சாதிய ஏற்றத் தாழ்வுகளை ஆழப் பதிந்துகிடக்கும் ஆணிவேரில் சுமந்துகொண்டிருப்பது இந்திய சமூக அமைப்பு. இந்தியாவில் முளைத்த அல்லது கால்பதித்த எந்த மதத்தையும் இந்தப் பிரிவினை விட்டுவைக்கவில்லை. மதங்கள் சாதிய அமைப்புகளோடு பின்னிப் பிணைந்தே இருக்கிறது.
இதனால் சமூகம் பற்றி சிந்தித்த தந்தை பெரியார் இத்தகைய ஏற்றத் தாழ்வுக் கட்டுமானங்களை கலகலக்க காதல் திருமணங்கள் அவசியம் என்று வலியுறுத்தினார். பெரியாரைப் பின்பற்றுகிற இயக்கங்கள் காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்கின்றனர்.
ஆனால் இந்தியாவின் கலாசாரம் என்பது தனித்துவமானது. இதனை சீர்குலைக்கும் வகையில் மேற்குல நாடுகளைப் போல் நடுவீதியில் கட்டிப்பிடித்து பொது இடங்களில் கும்மாளமிட்டுக் கொண்டிருப்பது கலாசார சீர்கேடு என்பது எதிர்ப்பாளர்களின் கருத்து.
காதலர் தினத்தன்ரு காதலர்களை காயப்படுத்தும் விதமாக நாய்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கிற அளவுக்கு இறங்கிப் போகின்றனர் கலாசார காவலர்கள்! சமூகக் காவலர்களும் கலாசார காவலர்களும் மோதுகிற களமல்ல காதலர் தினம்..
விநாயகர் சதுர்த்தி நாள், பாபர் மசூதி இடிப்பு நாளுக்கு இணையாக பதட்டத்தை உருவாக்காதீர்கள்
கொள்கைகளைப் பேசலாம்! வெளிப்படுத்தலாம்!
காதலர் தினத்தைக் கொண்டாடுகிறோம் என்று கூறிக் கொண்டு எதிர்தரப்பை உசுப்பேற்றாமல் இருப்பதும் காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக் கொண்டு காதலை கொச்சைப்படுத்தாமல் இருப்பதுமே அனைவரது எதிர்பார்ப்பு. காதலை அனுபவித்து கொண்டாட விழைவோரின் கனவுகளை கானல் நீராக்கிவிட வேண்டாம்!
நன்றி :http://yarlosai.com

காதலர் தினம் கூடுமா? காதலித்தால் பாவமா?

FEB 14: காதல் ஒரு பருவகால உந்தல். பருவ வயதை அடைந்த ஆண்,பெண் ஒருவேர்மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்பே காதல் ஆகும்.

 ஒருவர் மேல் காதல் உண்டாக அழகு என்கிற புற தோற்றங்களோ அல்லது அறிவு சார்ந்த கல்வி, வீரம், விவேகம், சமூக சிந்தனைகள் போன்ற அக தோற்றங்களோஒரு காரணமாக இருக்கலாம். 

தனது மனதுக்கு  பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் கடைசி இலக்காக இருக்கிறது. அதாவது காதல் என்பதின் கடைசி இலக்கு திருமணமே. 

ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும். அது பருவ வயதில் ஏற்ப்படும் சுகமான அனுபவம். காதல் என்றால் செல்போன் காதல் என்று நினைத்து விடாதீர்கள். நாம் பருவ வயதை கடந்து வரும்போது யாரையாவது நமது மனதுக்கு பிடிக்கும்.

ஆனால் நீங்கள் அவர்களோடு பேசி இருக்க கூட மாட்டீர்கள். இயல்பாகவே உங்கள் மனதுக்குள் ஒரு எண்ணம் தோன்றும் இவரை திருமணம் செய்தால் நலமாக இருக்கும் என்று மனம் எண்ணும்.இதுபோல் உள்ள சிறு சிறு விஷயங்கள் தொடங்கி ஒருதலை காதல் முதல் ஒருதடவை பார்த்த காதல்வரை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இந்த விஷயம் கடந்தே சென்றிருக்கும். 

சங்ககால காதல் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதோடு முடிந்து விடும். கண்களாலேயே பேசிகொள்வது ஏதாவது திருமணம், பண்டிகைகள் என்று பொது விசயங்களில் சந்தித்து கொள்வது என்பதோடு சரி. அன்றைய காலத்தில் காதல் என்பது உடல் சார்ந்த ஒரு விசயமாக இல்லாமல் மனம் சார்ந்த விசயமாக இருந்தது. காதல் என்றால் அன்பு, நேசம், பாசம் என்று ஒரு வரையறைக்குள் இருந்தது. 

ஆனால் இன்றோ நிலைமை வேறு ஒரு  நாளைக்கு ஒரு காதல் என்று பாஸ்ட் புட் வேகத்தில்இருக்கிறது. இந்த காலத்து  காதல்களில் பெரும்பான்மை உடல் கவர்ச்சியாலே வருகிறது. இன்று காதல் என்பது முக கவர்ச்சியில் தொடங்கி காமத்தில் முடிந்து விடுகிறது. காதலித்து திருமணத்திற்கு பின்னால் நடக்க வேண்டிய விஷயங்கள்  திருமணத்திற்கு முன்னாள் நடப்பதால் பெருன்பான்மையான காதல்கள் கானல் நீராகிப்போகிறது.

இப்படிப்பட்ட காதல்கள் உருவாக ஒரு வகையில் தாய் தந்தையர்களும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். காதல் என்பதன் முடிவு திருமணம் என்றிருக்க சொந்தம் விட்டு போக கூடாது, பணம், புகழ் இவற்றுக்கு ஆசைப்பட்டு தகுதியில்லாத திருமணங்களை  பெற்றோர்கள் முடித்து வைப்பதின் விளைவே இந்த கண்டதும் காதலின் அஸ்திவாரம்.  இன்றைய இளைய தலைமுறையினர்  காதல் செய்து திருமணம் செய்து கொண்டால்தான் சந்தோசமாக வாழமுடியும் என்று எண்ணுவதற்குபெற்றோர்கள் அதிமுக்கிய காரணியாக அமைந்து விட்டார்கள்.

திருமணம் முடிக்கும் முன் மணமக்களிடம் சம்மதம் கேட்பது என்பது ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.  அந்த பையனின், பெண்ணின் மனதில் என்ன விருப்பம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள யாரும் தலைப்படுவதில்லை. பெற்றோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்களில் ஏற்ப்பட்ட தோல்வியே இந்த கண்டதும் காதல் கலாச்சாரத்தை உருவாக்கியதுஇன்றைய பிள்ளைகள் பெற்றோர்களை இந்த விசயத்தில் நம்பத் தயாராக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

மற்றபடி பிப் 14  இல்  காதலர் தினம் கொண்டாட்டங்களை உருவாக்கியது  நமது கார்பெரெட் முதலாளிகளே. இப்படி ஒரு குறிப்பிட்ட தினத்தை மேலைநாடுகளில் உண்டாக்கி அதன் மூலம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுவதே இவர்கள் எண்ணம். காதலர் தினம் என்பது கார்பரேட் முதலாளிகளின் தினமே. உலகின் பலபகுதிகளில் மக்கள் உணவில்லாமல் பட்டினியில் சாகும் போது இதுபோன்ற கேளிக்கைகள் அவசியமற்றதே. மற்றபடி காதல் என்கிற ஒரு உணர்வுக்கு ஒரு தினம் எடுத்து (ஒரு விழா ) அதையும் செயற்கை ஆக்கவேண்டாமே.