உண்மைசுடும்

  • Free Website Hosting ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ?
  • Free Domain name ஐபிஎல்: மங்காத்தாவே இனி பாரதமாதா !
  • வட்டியும் முதலும் - ராஜுமுருகன்
  • Free Domain name இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளி! உதயகுமார்!!

Tuesday, 8 April 2014

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்

"வட்டி வரலியே தம்பி...''

நேற்று டீக்கடையில் கந்துவட்டிக்காரரைப் பார்த்த பிறகுதான் மாசம் பிறந்ததே தெரிந்தது. எப்போதோ வாங்கிய அவசரக் கடனுக்கு இன்னமும் வட்டி கட்டித் தீர்ந்தபாடில்லை. ''அசலக் கொண்டுவந்து இந்தாளு மூஞ்சில எறியணும்ரா...'' என ஒவ்வொரு முறையும் கடுப்பாகும். ஆனாலும், குட்டி போட்ட வட்டிதான் குரைத்துக் குரைத்துத் துரத்தும் ஒவ்வொரு மாசமும். இப்போது நெருக்கி முடித்துவிட்டேன்.

இந்த வாழ்க்கையே அந்த கந்துவட்டிக்காரர் மாதிரிதான் வாசலில் வந்து வந்து நிற்கிறது ஒவ்வொரு நாளும். வருத்தமும் பிரியமுமாக வாங்கிய அசலுக்கெல்லாம் வட்டி கட்டித் தீர்த்துவிட முடியுமா என்ன..? ''முன்ன மூணும் பயகளாவே போயிருச்சு... நாலாவதா நீயும் பயதான்னு தெரிஞ்சதும் கலைக்கறதுக்கு மருந்து சாப்பிட்டேன். லேட்டாகிப் போச்சா... மருந்து வேல செய்யாம நீ வந்து பொறந்துட்ட... சவலப் புள்ள... ஒரு வாரம் பொழைப்பியா இருப்பியானு புரியாம பொட்டிக்குள்ள வெச்சு ஒரு நர்சம்மாதான் காத்துச்சு...'' எனக் கலங்கும் அம்மா. ஏதோ ஒரு பிள்ளையை இன்குபேட்டரில் பாதுகாத்து உயிர் மீட்ட அந்த செவிலித் தாய் இப்போது எங்கிருப்பாள்? கோடி உயிர்களைக் காத்தெடுத்த எத்தனையோ முகம் தெரியா தாய்கள் எங்கெங்கோ இருக்கிறார்கள். தொப்புள் கொடியின் ஈரத்தைச் சாகும் வரைக்கும் கண்களில் வைத்துக்கொண்ட தாய்கள்.

காந்தியின் முதல் மகன் ஹரி லால்... காந்திக்கு நேரெதிர் பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்தவர். காந்தியின் தீவிர விமர்சகர். குடிகாரர். ஒருமுறை காந்தி, கஸ்தூரிபா அம்மையாருடன் ரயிலில் வந்துகொண்டிருக்கிறார். ரயில்வே நிலையத்தில் ஆயிரமாயிரம் ஜனங்கள் முண்டியடித்து 'வாழ்க’ கோஷம் போடுகிறார்கள். மகாத்மாவை ஒரு முறை பார்ப்பதற்கு முண்டியடிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் குடித்துவிட்டு நிற்கிறார் ஹரி லால். கூட்டத்தில் திமிறி ரயிலில் நுழைகிறார். அவரைப் பார்த்ததும், ''என்ன மகனே இது..?'' எனக் கலங்குகிறார் கஸ்தூரிபா. காந்தி மெலிதாகப் புன்னகைத்தபடி, ''காட் ப்ளெஸ் யூ சன்...'' என்கிறார். அப்பாவை உற்றுப் பார்க்கிற ஹரி லால், ''இதெல்லாம் எங்கம்மா உனக்குப் போட்ட பிச்சை...'' எனக் கத்திவிட்டு இறங்கிப் போய்விடுகிறார். இந்தக் காட்சியைப் படித்தபோது எனக்கு விலுக்கென்றது. உண்மையில் நமது புகழ், புனிதம், ஜீவிதம் எல்லாமே அம்மாக்கள் போடுகிற பிச்சைதானே?


''யப்பா... எனக்கு ஒண்ணும் வேணாம். ஒங்கம்மாவுக்கு மாசம் ஒரு ஆயிரம் அனுப்பு. தேவைக்கு இல்ல... மவன் நல்லாருக்கான்னு அதுக்கு ஒரு சந்தோஷம் வரும்ல... அதுக்கு...'' என்ற அப்பா வெட்டாத்தங்கரையில் எரிந்து உதிர்ந்தபோது பெருங் கடங்காரனாக நின்றிருந்தேன். செல்லப் பிராணியைப் போலத் தலை தடவும் அந்தக் காய்த்த கைகளுக்கான வட்டியைக் கட்டிவிட முடியுமா என்ன?

இயேசு அவதரிக்கிற கிறிஸ்துமஸ் இரவில், ஓவல் மிட்டாய்கள் இறுக்கிய கைகளைக் கட்டிக்கொண்டு ''ஆல்வேஸ் ஐம் வித் யூ...'' என்ற ரோஸி சிஸ்டருக்கான நன்றியைக் காட்டிவிட முடியுமா காலத்துக்கும்? எப்போதோ தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒன்றரை மணிக்கு காற்றில் ஊசி நூல் கோத்தபடி ஊமைச் செய்திகள் வாசித்த ஒரு பெண்ணின் முகத்தை இப்போதும் மறக்கவே முடியவில்லை... ஏனென்றும் தெரியவில்லை. பெரியகோவில் வாசலில் விழியோரம் நீர் கசிந்தபடி தும்பிக்கையைத் தூக்கித் தூக்கி இறக்கியபடி நின்ற ஒரு யானை, ராமநாதபுரம் வீட்டெதிரே ஒரு விடியலில் ஈக்கள் மொய்க்கச் செத்துக்கிடந்த மயில், அபிவிருத்தீஸ்வரம் வீடெங்கும் நிறைந்துகிடந்த கோழிக் குஞ்சுகள், பத்தாயத்தில் துளிர்த்துக்கிடந்த பூனைக்குட்டிகள், செங்காமட்டைக் கலரில் இதயம் மாதிரி உயிர் துடித்த எலிக் குஞ்சுகள், ஒட்டக்குடி தாத்தா வீட்டில் பொத்தென்று மண்ணில் விழுந்து கொள்ளைநோயில் செத்த பழுப்பு கலர் குதிரை, ராஜாங்கம் வீட்டெதிரே பார வண்டிக் குக் கீழே கண்டெடுத்த நாய்க்குட்டி... என் பால்யத்தில் ஓடவிட்ட ஈர நதியில் குளித்துக் கரையேற முடிய வில்லை இப்போதும்.

நவம்பர் 27-ஐத் துவக்கிவைத்த சங்கருக்கு... திலீபனுக்கு... இசைப்பிரியாவுக்கு.... என் இனத்துக்காக மனிதத்துக்காக என் கண்ணெதிரே எரிந்து வாழும் நண்பன் முத்துக்குமாருக்கு... தங்கை செங்கொடிக்கு என்ன செய்யப்போகிறேன் நான்..? அகதி என்ற சொல்லோடு, நியாயமற்ற பிரிவையும் கண்ணீரையும் ரத்தத்தையும் சுமந்து திரியும் கால்களுக்கு சிறு நிழலை விரித்துவிட முடியுமா என்னால்?

கேசவனின் மாமாவைச் சேர்க்கப் போயிருந்தபோது பைத்தியக்கார ஆஸ்பத்திரி வராந்தாவில் கையெல்லாம் கிழித்துவிட்ட காயங்களோடு நின்றபடி, ''அந்தாளு வெவரமான மனுஷன்... பைத்தியமாகிட்டாரு. என்னாலதான் ஆக முடியல... இன்னிக்கு ஆயிரலாம், நாளைக்கு ஆயிரலாம்னு பாக்கறேன்... நடக்க மாட்டுதே... பொம்பளைகளுக்குத்தான் எல்லாமே ஞாபகத்துல இருந்து தொலைக்குது...'' என்ற பெண்மணி என் தூக்கத்தை எத்தனை நாள் கெடுத்தாள் தெரியுமா? பைத்தியமாகிவிடுவோமோ எனப் பயந்துகிடந்த என்றோ ஒரு நாளில், என்னை ஆற்றுப்படுத்திய ஒரு பாலியல் தொழிலாளிக்கானதும் தீர்க்கவே முடியாத கடன்தான். ''கொரடாச்சேரில போட்டோ ஸ்டுடியோ ஆரம்பிக்கப்போறேன்... கடைக்கு ஒரு நல்ல பேரா சொல்லேன்...'' என்ற ரவியண்ணனை மறுநாள் பார்த்தபோது நிறைய பெயர்களைச் சொன்னோம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ''ராத்திரி நா ஒண்ணு நெனைச்சேன்... 'விடியல் புகைப்பட நிலையம்’ எப்படி இருக்கும்..?'' எனச் சிரித்தார் ரவி அண்ணன். அவ்வளவுதான் சொன்னார். விளக்கமெல்லாம் இல்லை. அந்த வார்த்தைகள் எனக்கு ஏற்படுத்திய மலர்ச்சியைச் சொல்லவே முடியாது. ஒவ்வொரு முறையும் அண்ணன்கள்தான் என்னைத் தங்கள் வார்த்தைகளால், செயல்களால், நம்பிக்கைகளால் தொட்டுத் தூக்கியிருக்கிறார்கள்.

''உணர்வதிலும் உணர்த்துவதிலும்தாண்டா இருக்கு வாழ்க்கை...'' என்ற கண்ணன் சாரின் வார்த்தைகள்தான் 'வட்டியும் முதலுமாக’ என்னை எப்போதும் தொடர்கிறது.


முந்தா நாள் ஒரு சின்னப் பெண் என்னைப் பார்க்க வந்தாள். நாலைந்து டைரிகளை என்னிடம் தந்து, ''அண்ணா... ஒரு உதவி... இந்த டைரிலாம் நான் ஒருத்தர லவ் பண்ணிட்டு இருக்கும்போது எழுதினது. இப்போ அது இல்லை. எனக்கு ஜூன்ல கல்யாணம் பேசியாச்சு. இந்த டைரியை எல்லாம் வீட்ல வெச்சுக்க முடியல. போற வீட்டுக்கும் கொண்டுபோக முடியாது. எங்கயாவது தூக்கிப் போடவும் மனசு இல்ல... உங்கள்ட்ட இருக்கட்டும்னுதான் குடுக்குறேன். என்னவோ இது உங்கள்ட்ட இருக்கணும்னு தோணுது... ப்ளீஸ்ணா...'' என்றபடி என் டேபிளில் வைத்துவிட்டுப் போய்விட்டாள். எடுத்துப் புரட்டிப் பார்த்தால் மொக்கையான ஃபீலிங்ஸ்தான். ஆனாலும், அது அவளுக்குக் காவியம்தான் இல்லையா? எடுத்துப் போகவும் முடியாமல் எரிக்கவும் மனசில்லாமல் இப்படி எத்தனையோ டைரிகள் இருக்கின்றன ஒவ்வொருவர் மனங்களிலும். திருப்பித் தந்து தீர்க்க முடியாத வட்டியும் முதலும் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன.
தினம் தினம் நாம் சந்திக்கும் ஒவ்வோர் உயிரும் நம்மைக் கொடையாளியாகவும் கடனாளியாகவும் ஆக்கிக்கொண்டே இருக்கின்றன. அந்தப் பெண் என் டேபிளில் வைத்துவிட்டுப் போன டைரிகள் மாதிரிதான் இந்த 'வட்டியும் முதலும்’ தொடரும்!

எங்கோ ஒரு கிராமத்து நூலகத்தில் விகடனை அதிசயம்போல் வாசித்த சிறுவன் நான். ஒரு நாள் அதே விகடனில் நிருபராக வேலை பார்க்கும் வாய்ப்பு வந்தது. சமூகத்தின் எல்லா அடுக்குகளுக்குள்ளும் போய் வருகிற வாய்ப்பு அது. சாலையோரம் தின்று உறங்கும் குடும்பத்தில் இருந்து அசெம்ப்ளி அமைச்சர் ரூம் வரை, குலசேகரபட்டினம் திருவிழாவில் இருந்து ஃபிலிம் ஃபெஸ்டிவல் வரை நிறைய இடங்கள்... முகங்கள்... பயணங்கள் என எனக்கு உலகின் புதிய ஜன்னல் களைத் திறந்துவிட்டது அந்த வாய்ப்புதான். 15 வயதில் வீட்டை விட்டு வந்துவிட்ட எனக்கு, இப்போது வரை ஒரு நாடோடி வாழ்க்கைதான். பொருளுக்கும் பிழைப்புக்கும் ஊரைவிட்டுப் புலம் பெயரும் யாவரும் நாடோடிகள்தான்... அகதி கள்தான். ஆனாலும், எனக்கு இந்த நாடோடி வாழ்க்கைதான் விருப்பமாக இருந்தது.

விவரம் தெரிந்த பிறகான நாளிலிருந்து தொடர்ந்து அதிகாரத்துக்கும் பணத்துக்கும் எதிரான மனநிலையிலேயே வாழ்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என நான் வளர்ந்த இடங்களெல்லாம் எனக்கு எளியவர் களின் அன்பையும் பசியையும்விட எதுவும் பெரிதில்லை என்பதைத்தான் சொல்லித் தந்தது.

''பசித்த கண்களை ஒரு நொடியில் அறிந்துகொள்கிறவன்தான் உண்மையான படைப்பாளி...'' என்ற சாரு மஜூம்தாரின் வார்த்தைகளை நோக்கித்தான் நான் படைக்க ஆரம்பித்தேன். எப்போதும் எந்த நாற்காலியையும் நோக்கி ஒரு படைப்பாளன் நடக்க முடியாது என்பதையும் மனதார உணர்ந்திருந்தேன். ஒவ்வொரு மனித மனமும் ஒரு மகா சமுத்திரம் என்பதை உணரும் தருணம் ஒவ்வொருவரும் படைப்பாளிதான். 'ஒரு கணம் கண் மூடினால் ஒரு கோடி மின்னல் மின்ன வேண்டும்’ என்ற பாரதியாக ஒரு கணம் மாறிவிடத் தவிக்கும் யாரும் கவிஞன்தான். சக மனிதர்களின் கண்ணீரையும் வியர்வையையும் உணர்ந்து எங்கோ எப்படியோ வெளிப்படுத்தும் அத்தனை பேரும் கிரியேட்டர்கள்தான்.

அன்றைக்கு அயோத்தியா மண்டபத்தில் உட்கார்ந்து விழிகளற்ற மூதாட்டி ஒருத்தி பிசிறு தட்டிய குரலில், 'எங்கும் நிறைந்திருக்கும் பரப் பிரம்மம்’ எனப் பாடிக்கொண்டிருந்தாள். அவளைவிடவும் பெரிய படைப்பாளி வேறு யார்? சாக்கடைக் குழிக்குள் இருந்து வெளியே வந்து உட்கார்ந்தபடி, ''அமுத மழையில் எந்தன் கவிதை நனைகிறது நிலவே கொஞ்சம் குடை பிடி...'' என ரசித்துப் பாடும் ஒருவனிடம் ராகமாவது சுதியாவது... அவன் அப்படி உட்கார்ந்து பாடியதே போதுமே!

நானும் அப்படித்தான் 'வட்டியும் முதலும்’ எழுத வந்தேன். சக மனிதர்களைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்பதைத் தவிர, எனக்கு என்ன தெரியும்? ஏகப்பட்ட ஊதாரித்தனங்களோடு, பொறுப்பின்மையோடு, புத்தகங்கள் வாசிப்பதும், சினிமா பார்ப்பதும், அரசியல் பேசுவதையும் தவிர, உருப்படியாக எதையும் செய்யாதவன். அன்பைப் புறந்தள்ளியவன். சிலருக்குத் துரோகித்தவன். முறைப்படுத்தப்படாதவன். அறத்துக்காகவும் அன்புக்காகவும் உண்மையாகக் குரலெழுப்பாதவன். கடவுள், மனிதன், அரசியல் என எல்லாவற்றிலும் குழப்பம் கொண்டிருந்தவன். நம்பிய இலக்குகளை அடைய வழி தெரியாமல், கூச்சமும் தயக்கமுமாக அலைந்து திரிந்தவன். உறவுகளைப் பேணத் தெரியாதவன். இவ்வளவு சுமைகளோடும் இருந்தவன் தான் நான். இப்போது எந்தச் சுமையும் இல்லை. ஒவ்வொரு லக்கேஜாகக் கழற்றிவிட்டுவிட்டேன். பொறுப்பு உணர்ச்சி என்பது மானுடத்துக்கானது என்பதை உணரும்போது வரும் சந்தோஷத்தை அனுபவித்து விட்டேன். அன்பைக் கொண்டாடக் கற்றுக்கொண்டேன்... அதோடு பிரிவைப் புன்னகையாக்கவும்!

அறத்துக்காகவும் எளியவர்களின் அரசியலுக்காகவும் முடிந்த வரை செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன். இலக்கை அடைவதில் புதிய நம்பிக்கைகளையும் பிடிவாதத்தையும் அடைந்திருக்கிறேன். எழுத்து, சினிமா, அரசியல் என எல்லாவற்றுக்குமான பயணங்களில் உங்களை அடைவதே என் நிரந்தர சந்தோஷம் என்பதை அறிந்துகொண்டேன். தெளிந்த ஊற்றைப் போல இப்போது இருக்கிறது மனம். ஒரு படைப்பு வாசிக்கிறவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் என்பது நான் கண்டடைந்த உண்மை. 

'வட்டியும் முதலும்’ மூலம் நீங்கள் என்னையே எனக்குக் கற்றுத்தந்துவிட்டீர்கள். திருப்பித் தந்துவிட்டீர்கள். 'உன்னில் இருந்தே தொடங்குகிறது உலகம்’ இல்லையா..? அப்படித்தான் என்னிலிருந்து இறங்கி, இந்த உலகத்தை அடைந்திருக்கிறேன் நான். எனக்கான உலகத்தை நீங்களும் உங்க ளுக்கான உலகத்தை நானும், ஏதோ ஓர் புள்ளியில் வந்தடைந்துவிடுவோம். அந்த தெருவோரக் கோயிலில் நீங்கள் வைத்த பிரார்த்தனையில் நானும், நான் வைத்த பிரார்த்தனையில் நீங்களும் இருக்கிறீர்கள். தேநீர்க் கடையில் வழியும் பாடலுக்கு என் கீர்த்தனாவை நானும், உங்கள் கீர்த்தனாவை நீங்களும் நினைத்துக்கொள்கிறோம். போராட் டங்களில் கோஷமிட்டபடி நான் நிற்கிறேன்... நீங்கள் கடந்து போகிறீர்கள். நீங்கள் நிற்கும்போது, நான் கடந்து போகிறேன். நாம் சேர்ந்து போராடுவோம் என்ற நம்பிக்கை இருவருக்குமானது!

இந்தத் தொடர் எனக்கு ஏராளமான நட்பையும் பிரியங்களையும் அள்ளித் தந்திருக்கிறது. எல்லாத் திசைகளில் இருந்தும் கடல் கடந்தும் எத்தனை எத்தனை முகங்கள்... குரல்கள்... சிநேகங்கள். ஒவ்வொரு வாரமும் தங்களை ஏதோ ஒரு விதத்தில் இந்தத் தொடர் மீட்டெடுத்ததாக யார் யாரோ சொல்லும்போதுதான், நான் அர்த்தப்பட்டேன். எவ்வளவோ கொண்டாட்டங்களும், பொழுதுபோக்குகளும், வேலைகளும் இறைந்துகிடக்கும்போது... இந்த எளிய எழுத்து உங்களைப் பாதித்தது சந்தோஷம். சக மனிதர்களுக்கான கவனிப்பை, ஈரத்தை, போராட்டத்தை உங்களுக்குள் இந்த எழுத்து கொஞ்சம் விதைத்திருந்தால், அது போதும்.

இந்த வாரத்துடன் 'வட்டியும் முதலும்’ தற்காலிகமாக நிறைவுறுகிறது. விடைபெறுதல் என்றெல்லாம் ஒன்றில்லை. பள்ளிக்கூடத்தின் கடைசி நாளில், இங்க் தெளித்த வெள்ளைச் சட்டையுடன், கோவக்கா படர்ந்த வேலிப்படலோரம் நின்ற கணேசன் விடைபெற்றுவிட்டானா என்ன? கல்யாணமாகிப் புகுந்த வீட்டுக்குக் கிளம்பும்போது, உள்ளே ஓடி வந்து கல்லூரி குரூப் போட்டோவை எடுத்துக்கொண்டு கார் ஏறிய தங்கச்சி விடைபெற்றுவிட்டாளா என்ன..? மரணத்துக்குப் பிறகும் சுடர்ந்துகொண்டிருந்த சே வின் விழிகள் மூடிவிட்டனவா என்ன? எத்தனை மைல்கள் கடந்து வந்துவிட்ட பிறகும், எத்தனை காலம் முடிந்துவிட்ட பிறகும், சில சொற்கள், தொடுதல்கள், நினைவுகளில் இருந்து விடைபெற முடியுமா என்ன? நாம் அனுதினமும் சந்திப்போம். எல்லோருக்குமான பிரார்த்தனைகளில்... எண்ணங்களில்... செயல்களில்!

இப்போது எனது முதல் திரைப்படத்துக்கான வேலைகளில் இருக்கிறேன். ஒரு வருடத்துக்கு முன்பு இயக்குநர் ஷங்கர் சாரிடம் ஒரு கதை சொன்னேன். ''இல்ல ராஜுமுருகன்... 'வட்டியும் முதலும்’ மாதிரி ஒரு கதையைத்தான் உங்ககிட்ட எக்ஸ்பெக்ட் பண்றேன். காமெடியும் எமோஷனலுமா ஒரு லைஃப் இருக்கு அதுல. அப்படித்தான் உங்க ஃபர்ஸ்ட் படம் இருக்கணும்'' என்றார். ஒரு மாதம் கழித்து இன்னொரு கதை சொன்னேன். அது ஏழு வருடங்களாக எனக்குள் இருந்த விஷயம். ''சூப்பர்... இதான் உங்க படம்...'' என்றார். அப்படித்தான் அந்தக் கதை உருவானது. விஜய் டி.வி. மகேந்திரன் சார் அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துப்போனார். படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அதற்கான படப்பிடிப்பு வேலைகளில்தான் இப்போது இருக்கிறேன். அதுவும் நமக்கான உலகத்தை மீட்டெடுக்கும் படமாக இருக்கும் என நம்புகிறேன். படத்தின் பெயர்... 'குக்கூ.’


நன்றி : ராஜு முருகன், ஆனந்த விகடன்
நன்றி: ஓவியர்: ஹாசிப் கான்

Saturday, 2 November 2013

நன்றி நரகாசுரன்…!

அசுரர்கள்ன்பமயமாய் வாழ்ந்தவர்கள்
தேவர்கள்! – அதற்கு
இடையூறு செய்தவன் நரகாசுரன்
அவனைத் தீர்த்துக்கட்டியது தீபாவளி!
கொண்டாடுங்கள் என்கிறது புராணம்…
அசுரன் கெட்டவன் என்றதால்
அப்பொழுதே மறந்தேன்,
தேவர்கள் நினைவில் தெருவில் கலந்தேன்
தீபாவளி விளம்பரத்தில் ஊரே தேவலோகம்!
கவர்ச்சிகரமான டிசைன்களுடன்
காத்திருக்கும் துணிக்கடை முதலாளிகள்,
”இந்த தீபாவளிக்கு
எங்களிடம் தலையைக்கொடுங்கள்” என
வாழ்த்துக்களோடு வழியும் எண்ணெய் முதலாளிகள்.
இந்துக்களின் புனிதத் திருநாளை
தலைமுடியில் பிடித்திழுக்கும்
பன்னாட்டு ஷாம்பு கம்பெனிகள்,
கவர்ச்சிகரமான வட்டியுடன்
நம் வாழ்வில் ‘ஒளியேற்றும்’
கார்ப்பரேட் வங்கிகள்,
விளைநிலத்தை தரிசாக்கி
‘ரெண்டுகிலோ ஸ்வீட், புஸ்வானத்தோடு’
தீபாவளி பரிசாக்கும்
ரியல் எஸ்டேட் முதலாளிகள்,
தென்திசைக் காற்றின் முகந்தனை தீய்த்து
நன்நீர் ஊற்றுக்கண் நிலத்தடி மாய்த்து
தலைமுறை மார்பினில் காசநோய் பூத்து
தீபாவளி விளம்பரமாய் சிரிக்கிறது
வேதாந்தா ஸ்டெர்லைட்.
சாதாரண இருமலுக்குப் போனவனை
‘சங்கு சக்கரமாய்’ சுத்த விட்டு,
வாயில் தர்மாமீட்டரை விட்டு
வயிறு வழியாக சொத்தை எடுத்து,
கிட்னிக்கு ‘வெடி’ வைத்து
இதயத்தில் பாம்பு மாத்திரை கொளுத்திய
மருத்துவமனை முதலாளிகள் வாயிலிருந்து
‘மகிழ்வான வளம் கூட்டும்’ தீபாவளி வாழ்த்துக்கள்.
தேவலோகம் இப்படியெனில்,
தேவர்களின் கொண்டாட்டமோ,
செத்த எலிக்கே வீச்சம்!
நெய்யிலும், பொய்யிலும் பிரபலமான
ஸ்வீட் கடைகளில் வித வித ‘ஆர்டர்கள்’!
கிரெடிட் கார்டில் முறுக்கு பிழியும்
ஐ.டி. வளர்ச்சிகள்!
இனிப்புகள் பீதியுற
மொய்க்கும் விழிகள்!
எல்லாம் செரிக்க
தீபாவளி மருந்தாய் தீபாவளி மலர் ஜெயமோகன்கள்.
ஆடையே அறியாதவர் போல்
அலைந்தலைந்து ஒரேநாளில்
ஆயிரக்கணக்கில் கடை நுழைந்து
புதிய ரகங்களை பொறுக்கியெடுக்க,
ஜவுளிக்கடை ஊழியர்களின்
எலும்புகளை முறிக்கும்
ஜாலி ஷாப்பிங்!
புதுத்துணியில் இழையோடும்
தொழிலாளியின் காயம்
பூசும் பண்டிகை மஞ்சளால் புலப்படும்.
திளைப்பும், கொழுப்பும்
காரின் வேகத்தில் தெரியும்,
புது நகை வாங்க போகும் வழியில்
தானும் பிழைக்கும் சாலையோர வியாபாரியின்
கால்களைப் பார்த்து
காரின் விளக்குகள் கண்களில் எரியும்!
”தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்”
என பண்டிகை வேகம்
உதட்டினில் வெடிக்கும!
தீபாவளி ஷாப்பிங்
“தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்”
கொளுத்தும் பட்டாசிலும்
குறிவைத்து அனுப்பும் ராக்கெட்டிலும்
வர்க்கத்தின் வனப்பு மின்னும்!
வேடிக்கைப் பார்த்து
தெருவினில் வெடிக்காத பட்டாசைத்
தேடித் திரியும் ஏழைப் பிள்ளை நெஞ்சில்
ஆசை வெடிமருந்தாய்ச் சேரும்!
அனாதைகளை உருவாக்கும்
சமூக அமைப்பிற்கு வெடிவைக்காமல்,
அனாதை இல்லங்களில் போய் வெடிவைத்து
ஆடை, இனிப்பு என ஆடிப்பாடி கொண்டாடி
அடுத்த நொடியே அவர்களின் தேசத்தை சூறையாடும்
கார்ப்பொரேட் தருமங்கள்!
மிச்சம் வைக்காமல் ‘பில்’ போட
தீபாவளியை ‘நுகர’ அழைக்கும் முதலாளிகள்
‘மிச்சம்’ வைக்காமல் கொண்டாட
தலை தீபாவளிக்கு தயாராகும் மாப்பிள்ளைகள்…
தேவரீர் சமூகத்தின்
இந்தத் திளைப்புகளைய்ப் பார்க்கையில்
நான் திடமாக நம்புகிறேன்…
இந்தக் கொண்டாட்டங்களுக்கு இடையூறாக இருந்த
நரகாசுரன் நிச்சயம் நல்லவன்தான்!
- துரை.சண்முகம்

Sunday, 6 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

நடிகைகளின் அங்கங்கள் , மதுபான கடையில் குத்து பட்டு . இரட்டை அர்த்த வசனங்கள் என எந்த அசிங்கக்ளும் இல்லாத ஒரு நவீன காடு இந்த ஆடு ஓநாய் வாழும் படம்..

பிரமாண்டம் அல்ல பிரமாதம் .. உலகமெல்லாம் போய் எடுத்த உள்ளூர் சினிமா அல்ல ... உள்ளூர் தெருக்களில் எடுத்த ஓர் உலக சினிமா..

நானும் பலரை போல் சினிமா விமர்சனத்தில் இறங்க வில்ல , ஆனால் இதை புகழாமல் இருக்க முடியவில்லை.. இளையராஜா இசை ....மிஷ்கின் படைப்பு .....தமிழ் சினிமா இன்னும் செழித்து வாழும் இவர்களை போன்றவர்களால் ...

வாழ்த்துக்கள் திரு. மிஷ்கின்

Tuesday, 24 September 2013

தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு

இலங்கையில் நடந்த முதலாவது வட மாகாண சபைக்கான தேர்தல், எதிர்பார்த்த படியே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம், 13 ம் திருத்தச் சட்டம் மூலம் நடைபெற்று வரும் மாகாண சபைகளினால், இன்று வரையில் வடக்கு-கிழக்கை தவிர்ந்த பகுதிகளை சேர்ந்த மக்களே இலாபமடைந்துள்ளனர்.

எண்பதுகளின் இறுதியில், இந்திய இராணுவம் குவிக்கப் பட்டிருந்தும், அன்று வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த மாகாண சபைக்கு, வட மாகாணத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை. "ஒரு பிராந்திய வல்லரசான இந்தியாவால் முடியாத காரியத்தை தான் சாதித்துக் காட்டி விட்டதாகவும், ஜனநாயகத்தை மீட்டு விட்டதாகவும்," ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனிமேல் பீற்றிக் கொள்ளலாம். உண்மையில் இந்தியாவும் இந்த தேர்தலை நடத்துவதில் தன்னாலான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது.

ஈழப்போர் முடிந்த பின்னர், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இரண்டு தடவைகள் நடத்தப் பட்டாலும், வட மாகாண சபைக்கான தேர்தல் காலவரையறை இன்றி பின்போடப் பட்டு வந்தது. இறுதியில் இந்தியா, மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக தேர்தல் நடத்தப் பட்டது. ஜனாதிபதியும், ஆளும் சுதந்திரக் கட்சியும் எந்தக் காரணத்திற்காக தேர்தலை பின்போட்டார்களோ, அது நடந்து விட்டது. இன்று தமிழ் தேசியத்தையும், புலிகளுக்கு பின்னான அரசியலையும் முன்னெடுப்பதாக கருதப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. 

மத்திய அரசில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, "அபிவிருத்திப் பணிகள்" என்ற மாயமானைக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்து மண் கவ்வியுள்ளது. மிக முக்கியமான அபிவிருத்தித் திட்டங்கள், தேர்தலை ஒட்டியே பூர்த்தி செய்யப் பட்டன. தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான், புனரமைக்கப்பட்ட A - 9 சாலை திறந்து விடப் பட்டது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருப்பதைப் போல, "கார்பெட் சாலை" அமைக்கப் பட்டதினால் போக்குவரத்து இலகுவானது. அதே போன்று, கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, தொண்டமானாறு பாலம் என்பனவும் பொது மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்தன என்பதை மறுப்பதற்கில்லை. 

வட மாகாண சபை தேர்தல் நடப்பதற்கு முன்னர், சில தினங்களுக்கு முன்னர், யாழ்தேவி புகையிரதம் கிளிநொச்சி வரை வந்தது. அதற்காக கிளிநொச்சி வந்து திறந்து வைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அப்போது நடந்த பொதுக் கூட்டத்தை, தேர்தல் பிரச்சார மேடையாக பாவித்தார். இதே போன்று, தொண்டமானாறு பாலம் திறப்புவிழாவும் தேர்தல் பிரச்சார உத்தியாகவே நடந்தது. A - 9 பாதையில் செல்லும் வாகனங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக, சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிரமாண்டமான எரிபொருள் நிரப்பு நிலையம் கட்டப்பட்டது. அமைச்சர் பசில் ராஜபக்ச அதனை திறந்து வைத்தார். 

மேற்குறிப்பிட்ட "அபிவிருத்திப் பணிகள்" மூலம், ஐ.ம.சு.கூ. வுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைக்கலாம் என்று ஆளும் கட்சியினர் கனவு கண்டிருக்கலாம். ஆனால், இது போன்ற தேர்தல் கால தந்திரம் எதுவும், தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. அபிவிருத்தி பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாத, திரும்பத் திரும்ப தமிழர் உரிமைப் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசும், த.தே.கூ. வுக்கு மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். த.தே.கூ. தலைவர்கள், தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அரசின் அபிவிருத்தித் திட்டங்களை விமர்சிக்கத் தயங்கவில்லை. "கார்பெட் வீதி போட்டிருக்கிறார்கள். யாருக்காக? எமக்காகவா? இல்லை. தென்னிலங்கை முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும், எமது வளங்களை சுரண்டிச் செல்வதற்காக போட்டார்கள்." என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேடை தோறும் முழங்கினார். அதிலே உண்மையில்லாமலில்லை. எங்கேயும் முதலாளித்துவத்தின் தேவைகளுக்காகவே நெடுஞ்சாலைகள் அமைக்கப் படுகின்றன.

நெடுஞ்சாலைகளும், வேறு சில அபிவிருத்திப் பணிகளும் வாக்குகளை அறுவடை செய்யாதற்கு காரணங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையான A - 9 பாதையினால் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு பலனேதும் ஏற்படவில்லை. வசதியுள்ள மத்தியதர வர்க்கத் தமிழர்கள் அந்த அபிவிருத்தியால் பயனடைந்துள்ளனர். ஆனால், அவர்களது வர்க்க நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் த.தே.கூ. க்கு மட்டுமே வாக்களிப்பார்கள். A - 9 பாதையில் மாட்டு வண்டில்கள், டிராக்டர்கள் செல்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் அதிருப்தியை பெருமளவு சம்பாதித்துள்ளது. அன்றாடம் சைக்கிள்களில் வேலைக்கு சென்று வரும் உழைக்கும் மக்களும், கார்ப்பெட் சாலைகளை கூடுமான அளவு தவிர்த்துக் கொள்கின்றனர். 

பிரதானமான சாலைகளை தவிர, உள்வீதிகள் எல்லாம் குண்டும், குழியுமாக காணப் படுகின்றன. அவற்றை செப்பனிட யாரும் இல்லை. இதைத் தவிர, கிராமங்களை இணைக்கும் பாதைகளும் புழுதி மணலும், கற்களும் நிறைந்ததாக உள்ளன. சில கிராமங்கள் ஐம்பது, நூறு வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தனவோ, அவ்வாறே இன்றும் உள்ளன. விவசாயம், வெளிநாட்டுப் பணம் போன்ற பொருளாதார வசதிகளால் தமது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்கள் கிராமங்களில் உள்ளனர். ஆனால், அவர்களும் தமது கிராமத்தின் அபிவிருத்தியை விட, தமிழர் உரிமை முக்கியமானதாக கருதுகின்றனர். 

ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள், கிராமிய மட்டத்தில் சில அபிவிருத்திகளை மேற்கொண்டாலும், அவை எல்லாம் தம்மை ஏமாற்றுவதற்காக தேர்தலை முன்னிட்டு நடக்கின்றன என்பதை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, தென்மராட்சியை சேர்ந்த, சுதந்திரக் கட்சியின் பிரதான வேட்பாளராக நிறுத்தப் பட்ட சர்வா, தனது தொகுதி மக்களுக்காக அவசர அவசரமாக மின் கம்பங்களை கொண்டு வந்து நாட்டினார்.

இருபத்தோராம் நூற்றாண்டிலும் தனது தொகுதி மக்கள் மின்சாரம் இன்றி வாழ்கின்றனர் என்பது, தேர்தல் நேரம் தான் அந்த வேட்பாளருக்கு ஞாபகம் வந்தது. (அவர் முந்திய தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு வென்று, சுதந்திரக் கட்சிக்கு மாறியவர்.) அந்தக் கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏழைகளாக இருந்தாலும் புத்திசாலிகள். அதனால், அதிரடி அரசியல்வாதி சர்வாவை தேர்தலில் தோற்கடித்தார்கள். தேர்தல் முடிந்த பின்னர், மின் கம்பங்களை திரும்பக் கொண்டு சென்று விடுவார்கள் என்று மக்கள் நேரடியாகேவே பேசிக் கொண்டனர்.

யாழ் குடாநாட்டில் இனப்பிரச்சினையின் தாக்கமானது, ஈழப்போருக்கு முன்பிருந்ததை விட, இன்று அதிகமாகவே உணரப் படுகின்றது. காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் படையினரின் பிரசன்னம் ஒரு முக்கியமான பிரச்சினை ஆகும். புலிகளை முற்றாக அழித்து விட்ட மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்ரீலங்கா படையினர், தற்போது பொது மக்களை துன்புறுத்துவதில்லை. (அரசியல் பழிவாங்கல்கள் வேறு.) ஆனால், பொது மக்களின் காணிகளை அடாவடித் தனமாக பறித்து, அங்கே முகாம்களை அமைத்துள்ளனர். 

சில இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகள், முன்பு "புலிகளின் சொத்துக்களாக" இருந்தவை. அவை அனைத்தும், புலிகளுக்குப் பின்னர் தனக்கே சொந்தமாகும் என்று, ஸ்ரீலங்கா இராணுவம்  உரிமை கோருகின்றது. ஆனால், முகாம்களை விரிவுபடுத்துவதற்காக அருகில் உள்ள பொதுமக்களின் காணிகளை கூட அபகரிக்கிறார்கள். சில இடங்களில், முன்பு குடியிருந்த பொது மக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டு, வேலிகள் அகற்றப் பட்டுள்ளதால், நிலத்திற்கு உரிமை கோருவது கடினமாக்கப் பட்டுள்ளது.

இன்றைக்கும் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், தமது நிலங்களை திருப்பித் தருமாறு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவம் வாடகைப் பணம் தருவதாக சொல்லியும், அதை மறுத்து தமக்கு நிலம் மட்டுமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யுத்தம் முடிந்த காலத்தில் இருந்த முகாம்கள் பல இன்று அகற்றப் பட்டு விட்டாலும், பல இடங்களில் இன்றைக்கும் நிலப்பிரச்சினை தொடர்கின்றது. நாவற்குழியில் அமைந்துள்ள சிங்களக் குடியேற்றம் காரணமாகவும், அங்கு வாழும் தமிழர்கள் பாதிக்கப் பட்டனர். அந்தப் பிரச்சினை தனியாக அலசப் பட வேண்டும். 

கிராமங்களில் வாழும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் கூட, உயர்கல்வி கற்ற பின்னர் நகரங்களை நோக்கிச் செல்வது வழமை. இது ஒரு சமூகம் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து, கீழ் மத்தியதர வர்க்கத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்ளும் காலகட்டம் ஆகும். நகரங்களை நோக்கிச் செல்லும் படித்த தமிழ் இளைஞர்கள், அங்கே ஒரே தகைமை கொண்ட சிங்கள இளைஞர்களுடன் போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த இடத்தில், "சிங்கள இனத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை கிடைப்பதாக" உணர்கின்றனர். அந்த உணர்வு பின்னர், "தமிழ் தேசிய உரிமைப் போராட்டமாக" மாறுகின்றது. த.தே.கூ. ஆல், இளைஞர்களின் ஏமாற்றத்தினை, தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்ய முடிகின்றது.


ஈழத் தமிழ் சமூகத்தை புரிந்து கொள்வது இலகுவானதல்ல. சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, தமிழக அரசியல்வாதிகளும் அந்த விஷயத்தில் பலவீனமாக உள்ளனர். இனம், வர்க்கம், சாதி போன்ற அம்சங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து அரசியல் களத்தை சிக்கலாக்குகின்றன. முன்பு நடந்த தேர்தல்களில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் முக்கியமாக கவனிக்கப் பட்டாலும், கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் அவை புறக்கணிக்கப் பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, இன்றைக்கும் தன்னை யாழ் சைவ - வேளாளர் மையவாத கட்சியாகவே தன்னைக் காட்டிக் கொள்கின்றது. ஆனால், பெரும்பாலான தமிழர்கள் அதனை அலட்சியப் படுத்தி வந்துள்ளனர்.

கூட்டமைப்பில் சில விதிவிலக்குகளை தவிர, அனேகமாக எல்லா வேட்பாளர்களும் உயர் சாதிகளை சேர்ந்தவர்கள் என்பது தற்செயலாக இருக்க முடியாது. மறுபக்கத்தில், ஆளும்கட்சியுடன் சேர்ந்தியங்கும் ஈபிடிபி, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு தாராளமாக இடமளித்து வந்துள்ளது. ஆயினும், தாழ்த்தப்பட்ட சாதியினர் பெரும்பான்மையாக கூட்டமைப்புக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். ஐ.ம.சு.கூ. ல் போட்டியிட்டு வென்ற, ஈபிடிபி யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலிற்கு மட்டும் அதிகப்படியான விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. அவர் ஒரு தலித் சமூகத்தவர் என்பதால், தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஓட்டுக்கள் விழுந்திருக்க வாய்ப்புண்டு. அதுவும் சாதி அபிமானம் காரணமாக விழுந்த வாக்குகள் என்று கருத முடியாது. ஏனெனில், ஐ.ம.சு.கூ. ல் இன்னொரு தலித் வேட்பாளர், தனது சாதியை பகிரங்கமாக வெளிப்படுத்தி பரப்புரை செய்து வந்தார். தேர்தலில் அவர் படு தோல்வி அடைந்தார்.

உலகமயமாக்கல் என்ற சூறாவளியினால் தாம் ஒதுக்கப் பட்டு விடுவோமோ என்ற அச்சம், நிறையத் தமிழர்கள் மத்தியில் காணப் படுகின்றது. உலகமயமாக்கலால், எதிர்காலம் பற்றிய கனவுகள் சிதைவதையும்,வாழ்க்கை குறித்த அவநம்பிக்கையையும், இலங்கைத் தீவுக்குள் தோற்றுப்போன சமுதாயமாக ஓரங்கட்டப் படுவதையும் உணர்கின்றனர். இதனை அவர்கள் தமக்குத் தெரிந்த வழியில் வெளிப்படுத்துகின்றனர். "தென்னிலங்கையில் இருந்து படையெடுக்கும் சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்துவதாக," அதனைப் புரிந்து கொள்கின்றனர். மேலாதிக்கம் செலுத்தும் சிங்களவர்கள், உலகமயமாக்கலின் தூதுவர்களாக வருகை தருகின்றனர், என்பதை யாரும் உணரவில்லை. 

இதனால் என்ன நடக்கிறது என்றால், தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மேலாண்மை குறித்த அச்சத்தை பயன்படுத்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறுகின்றது. வென்ற பின்னர், கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிங்கள மேலாண்மைக்கு அடிபணிந்தது நடக்கின்றனர். இதற்கு முன்னர் நடந்த, பாராளுமன்ற, பிரதேச சபைத் தேர்தல்களில் இருந்து அதனைப் புரிந்து கொள்ளலாம். வட மாகாணத்தில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எல்லோரும், அனேகமாக கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தான். ஆனால், அவர்களால் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. 

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் தமது தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக, அரசு நிதி ஒதுக்குவது வழமை. ஆனால், அரசு ததேகூ உறுப்பினர்களுக்கு கொடுக்கும் நிதியின் அளவு மிகக் குறைவு என்பதை மறுப்பதற்கில்லை. மத்தியில் ஆளும் சுதந்திரக் கட்சி, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை வேண்டுமென்றே புறக்கணித்து வருகின்றது. ஆனால், கிடைக்கும் சொற்ப நிதியைக் கூட ததேகூ உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை. இதனால், தொகுதி மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக அரச தரப்பினரை நாட வேண்டியுள்ளது.

சுதந்திரக் கட்சி, ஈபிடிபி அமைப்பாளர்கள் தேர்தலில் தெரிவாகாமல் தோல்வியடைந்து இருக்கலாம். ஆனால், அவர்கள் கைகளில் தான் அதிகாரம் உள்ளது. வட மாகாணத்தில், படையினர் சிவில் நிர்வாகத்தில் தலையிடுவது இரகசியமல்ல. ஊரில் நடக்கும் பகிரங்க ஒன்றுகூடல் எது என்றாலும், இராணுவத்திற்கு அறிவிக்காமல் நடத்த முடியாது. ததேகூ மாகாண சபையை பொறுப்பெடுத்த பின்னர், அந்த நிலையில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு மாறாக, ததேகூ வின் மாகாண சபை அரசாங்கம், இராணுவ ஆட்சிக்கு ஒரு ஜனநாயக முகமூடி போன்று செயற்பட வாய்ப்புண்டு. 

வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்தியதன் மூலம் "ஜனநாயகத்தை காப்பாற்றி விட்டதாக"(?) ராஜபக்ஷ அரசு பீற்றிக் கொள்ளும். அடுத்து நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மகாநாட்டிலும் அது எதிரொலிக்கும். ஆனால், கூட்டமைப்புக்கு விழுந்த ஓட்டுகள் எல்லாம், அரசின் மீது அதிருப்தியுற்ற தமிழ் மக்களின் எதிர்ப்பு வாக்குகள் என்பதை, கொழும்பு புரிந்து கொள்ளுமா என்பது கேள்விக்குறி தான்.

தெற்கில் ஏற்கனவே, மாகாண சபை தேர்தல் முடிவுகளுக்கு எதிரான, கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளின் இயக்கம் ஆரம்பித்து விட்டது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான நாளில் இருந்து, அதனை "பிரிவினைவாதம், இனவாதம்" என்று முத்திரை குத்தி பரப்புரை செய்து வருகின்றனர். தங்களது பிரிவினைவாத பரப்புரை  "மெய்ப்பிக்கப் பட்டு விட்டதாக" அவர்கள் இனி வாதாடலாம். வட மாகாண சபையை இயங்க விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கலாம்.

ஈழத்தமிழரின் அரசியல் நிலவரம், 77 ம் ஆண்டுக்கு திரும்பிச் சென்றுள்ளதை நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் சுட்டிக் காட்டுகின்றது. வடக்கில் எழுந்த தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையும், அதற்கு எதிர்வினையாக தெற்கில் எழுந்த பிரிவினை குறித்த அச்சமும் மீண்டும் எதிரொலிக்கின்றது. ஆனால், இந்த முறுகல் நிலை மீண்டும் ஒரு ஆயுத மோதலுக்கு இட்டுச் செல்லும் என்பது ஒரு மிகைப் படுத்தப் பட்ட கூற்றாகும். 

ஒரு பக்கம் சிங்கள இனவாதிகளும், மறுபக்கம் தமிழ் இனவாதிகளும் மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலை உருவாக வேண்டுமென்று விரும்பலாம். ஆனால், வெளியில் இருந்து இலங்கை அரசியலை தீர்மானிக்கும் வல்லமை பொருந்திய சக்திகளான, இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே, சர்வதேச அழுத்தம் காரணமாக, ராஜபக்ஷ அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வாய்ப்புண்டு. இந்தத் தேர்தலிலும், வழமையாக தமிழ் மக்கள் தான் தோற்கடிக்கப் பட்டுள்ளனர்.   

Thursday, 23 May 2013

யாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?


1983-ல் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதிக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.


டலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கருத்தரங்கில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்றதை காந்தி பெயரை வைத்துக் கொண்டு கொலைவெறி ஆட்டம் போடும் காங்கிரசும், பலான விசயம் மற்றும் பயங்கரவாதம் இரண்டையும் விடாது செய்யும் பாரதீய ஜனதா கட்சியும் கண்டித்துள்ளன.
யாசின் மாலிக்
யாசின் மாலிக்
“வெளிநாடுகளின் தொடர்பு இருப்பதாக யாசின் மாலிக் பலமுறை கைது செய்யப்பட்டவர். இந்தியாவின் இறையாண்மையை கேள்வி கேட்டு காஷ்மீரத்தை துண்டாடத் துடிக்கும் அவர், கடலூருக்கு எப்படி வந்தார்? கூட்டம் நடத்தியவர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அவரை கடலூருக்கு அழைத்து வர உதவிய இயக்கங்கள் எவை? இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு தமிழகத்தின் அமைதியைக் குலைக்க விரும்பும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் தூவும் விஷவித்துக்கள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து தேசபக்தியுள்ள எல்லா கட்சிகளும் இதனை எதிர்க்க வேண்டும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“இலங்கைத் தமிழர் உரிமை காக்கும் போராட்டம் என்று கூறி காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை பங்கேற்கச் செய்திருப்பது தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலைகுனியச் செய்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஜாதி, மதம் என்ற வேறுபாடுகள் இன்றி ஈழத் தமிழர் என்ற அடையாளத்துடன் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால், சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் மற்ற மாநிலங்களைவிட அதிக சலுகைகள் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக இந்திய அரசியல் சட்டத்தில் 370 என்ற சிறப்பு விதியே உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி சலுகைகள் வழங்கினாலும் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும் என இந்துக்களை துரத்தியடித்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் யாசின் மாலிக். எனவே, இலங்கைத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை காஷ்மீர் பிரிவினைவாதிகளோடு இணைத்துப் பார்ப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். மரக்காணம், தருமபுரி போன்ற பகுதிகளில் கலவரம் ஏற்பட்டபோது அங்குச் செல்ல தமிழகத் தலைவர்கள் சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவைத் துண்டாட நினைக்கும் யாசின் மாலிக் போன்றவர்களை தமிழகத்தில் அனுமதித்தது அபாயகரமானது” என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பேசவில்லையே தவிர அவர் இவர்களை விட இன்னும் ஒருபடி அதிகம் உறுமக்கூடியவர். மேற்கண்ட அறிக்கைகளின் படி காங்கிரஸ், பா.ஜ.க இரண்டும் நாங்கள் பாசிச கட்சிகள்தான் என்பதை ஒரே குரலில் உறுதி செய்கின்றன.
“ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டம் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, நாட்டின் பிற பகுதி மக்கள் அங்கு போய் நிலம் வாங்கக் கூட அனுமதி இல்லை” என்று பாரதீய ஜனதா தலைவர்கள் புலம்பியிருக்கின்றனர்.
இந்திய இராணுவம் காஷ்மீரில்
காஷ்மீரில் இந்திய இராணுவம்
ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் கடைக்கு போய் காய்கறி வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் 1 லட்சம் இராணுவப் படையினரை குவித்துள்ளது இந்திய அரசு. வீட்டிலிருந்து கடைக்குப் போவதற்குள் 10 இராணுவ தடை அரண்களை கடந்து போக வேண்டும், அதில் 9-வது அரணில் கூட தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படலாம் என்ற அடக்குமுறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் கேட்பாரன்றி மக்கள் மீது அடக்கு முறையை செயல்படுத்தும் உரிமை இந்திய இராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1980-முதல் 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தான் சிறப்பு சலுகை என்று புளுகுகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக யாசின் மாலிக் ராஜஸ்தான், காஷ்மீர், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார். யாசின் மாலிக்கின் அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, ஜம்மு காஷ்மீரை இந்திய, பாகிஸ்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து சுதந்திர தேசமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. மத வேறுபாடுகள் அற்று, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அனைத்து மக்களையும் காஷ்மீர் என்ற அடையாளத்துடன் இணைத்து இந்திய/பாகிஸ்தானிய அரசுகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறது ஜே.கே.எல்.எப்.
இந்திய அரசால் காஷ்மீர் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜக்மோகனால் தூண்டப்பட்டு வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளையும் திரும்ப காஷ்மீரில் குடியேற்ற வேண்டும் என்று பேசி வருபவர் யாசின் மாலிக்.
1983 தில்லியில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், 2002 கலவரத்தில் குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதிக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.
சிங்கள இனவெறி அரசால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடும் போது இந்திய அரசால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களே நமது நேச சக்தியாக இருக்க முடியும். ஆனால் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஈழத்தமிழரின் உரிமைகளை ஒடுக்கி ஆட்டம் போடும் சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பவர்கள். புலி ஆதரவாளர்கள், தமிழினி ஆர்வலர்கள் பலரும் கூட பாரதிய ஜனதா கட்சி காங்கிரசுக்கு தேவலாம் என்ற சந்தர்ப்பவாத பார்வை கொண்டவர்களே. அப்படிப்பட்டவர்கள் பாஜகவின் காஷ்மீர் குறித்த ஒடுக்குமுறைப் பார்வையை பார்த்தாவது திருந்தட்டும்.
போர்க்குற்றவாளியும், இனப்படுகொலை செய்தவருமான ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து உபசரிக்கும் காங்கிரசும், பாஜகவும்தான் பயங்கரவாதத்திற்கு உதவி செய்கின்ற கட்சிகளே அன்றி யாசின் மாலிக் அல்ல

ன்றி  வினவு

Friday, 25 January 2013

விஸ்வரூபத்தின் விஸ்வரூபம் (காணொளி)


நாளை பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி வந்துவிடும் என்ன செய்யப்போகிறீர்கள்..?
kamal rajini This video is for the Vishwaroopam protestersதியேட்டரில் பார்த்தால் மட்டும் களங்கம் திருட்டு வி.சி.டியில் பார்த்தால் களங்கமில்லையா..?
இன்று அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் விஸ்வரூபம் வெளிவருகிறது, என்றால் என்ன அர்த்தம்..?
நாளை விடிந்தால் பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி வந்துவிடும், எப்படித் தடுக்கப் போகிறது தமிழக அரசு..?
சொற்ப நேரத்தில் இணையத்தில் முழுமையான திரைப்படமும் திருட்டுத் தனமாக தரவேற்றம் செய்யப்பட்டுவிட வாய்ப்புள்ளது..
இஸ்லாமிய அமைப்பக்களின் மனம் திருட்டு வி.சி.டியாலும், திருட்டு இணைய வெளியீட்டாலும் புண்படாது.. தியேட்டரில் காண்பித்தால் மட்டும்தானா புண்படும:..? நெஞ்சைத் தொட்டு இந்தக் கேள்வியைக் கேட்க தமிழகத்தில் ஒரு நாதி இல்லாத காரணத்தால் வெளி நாட்டிலிருந்து நாம் கேட்கிறோம்..
விஸ்வரூபத்தை தடுக்க முன் இஸ்லாமிய சகோதர அமைப்புக்களும், அவர்களுடைய பேச்சைக் கேட்டு முடிவெடுத்த தமிழக முதல்வரும் இந்த இரண்டு கேள்விக்கும் விடை தேடியிருக்க வேண்டும்.
மனச்சாட்சிப்படி சரியான பதிலை கண்டுவிட்டு திரைப்படத்தை நிறுத்த முன் வந்திருக்க வேண்டும்..
இன்று திரைப்பட வர்த்தகம் என்பது வெள்ளி, சனி, ஞாயிறு என்று மூன்று நாட்களுக்குள் நடந்து முடியும் வர்த்தகமாகிவிட்டது, தாமதித்தால் திங்கள் திருட்டு வி.சி.டி வந்துவிடும், அதனால்தான் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் ஒரே நேரத்தில் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
இப்படியிருக்க தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட கடைசி நேர தடையால் கமலுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதைத் தவிர வேறு என்ன இலாபம் கிடைத்துள்ளது என்று கேட்டால் பதில் பூஜ்ஜியமே..
முன்னையை விட அதிகமானவர்கள் திருட்டு வி.சி.டியில் விஸ்வரூபத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறார்கள், கடைசியில் யானை தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்ட வேலையைத்தான் தமிழக அரசு செய்ததாக முடிந்திருக்கிறது.
ரஜினி வெளியிட்ட அறிக்கையில் செலவான பணம் தனது நெஞ்சை நடுங்க வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கமலின் காரியாலயத்திற்கு படையெடுக்கும் கந்து வட்டிக்காரர் பற்றிய செய்தியைத்தான் அவருடைய நடுக்கம் தெரிவிக்கிறது போலும்..
100 கோடிக்கு நாளாந்த கந்துவட்டி என்ன.. அந்த வட்டி தாமதமாவதால் பெருகும் கடப்பாரை வட்டி என்ன..?
இப்படியான திரைப்பட வெளியீடு ஒரு நாள் தாமதித்தாலே போதும் விட்ட பணம் காற்றில் மாயமாகிவிடும்.
இது தெரியாதது போல ஒரு பம்மாத்து அறிக்கை விட்டிருக்கிறார் ரஜினி..
கமல் அமெரிக்காவில் இருந்து திரும்பி, பேச்சுக்களை நடாத்தி, கதைக்கு பங்கமில்லாமல் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்று வழிகாட்டியிருக்கிறார்.
ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா.. திருட்டு வி.சி.டி அமாவாசையை விட வேகமானது..
ரஜினியின் அறிக்கை கமலுக்கு மேலும் நெருக்கடியையும், தாமதத்தையும் கொடுத்திருக்கிறது.
ரஜினி நடிக்க இருந்து பின் அவர் நடிக்காது சரத்குமார் நடித்து வெளியான ஜக்குபாய் வெளி வரமுன்னர் திருட்டு வி.சி.டி வந்ததே.. என்ன நடந்தது..
பேசிச் செய்ய முடிந்ததா..?
இல்லை..!!
நிமிடத்துளிகள்தான் இதில் விளையாடுகிறது..
இதெல்லாம் ரஜினிக்கு தெரியும், தான் சும்மா இருந்துவிட்டேனே என்று மற்றவர் குறை கூறுவர் என்பதற்காக ஒரு நாடக வேடமிட்டிருக்கிறார்..
ஊரோடு ஒத்துப் போவதுதானே முறை என்று ரஜினி சொன்னதாக கோடம்பாக்கத்தில் ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
திரையுலகைச் சேர்ந்த மற்றய நடிகர்கள் உறைந்து கிடக்கிறார்கள், அடுத்த திரைப்பட்த்தில் பஞ்ச் வசனம் பேச தொண்டையை செருமுகிறார்கள்.
கமல் இனியும் தொலைக்காட்சிகளில் வந்து இந்த நடிகர்களை நண்பர்கள் என்று கூறினால் அதன் அர்த்தம் அதுவாக இருக்காது.
சரி இந்த இக்கட்டான நிலையில் தமிழக மக்கள் என்ன செய்கிறார்கள்…
சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரையே கோயிலில் பிச்சையெடுக்க வைத்து மேலுலகம் அனுப்பிய மக்கள்தானே.. அவர்களுக்கு கமல் எம்மாத்திரம்…
சினிமா பைத்தியம் என்று பட்டம் கேட்டு, படத்திற்கு தடையையும் சந்தித்த கமல் பொருளாதார ரீதியாக தோல்வியடையலாம்…
விஸ்வரூபம் தரம் குன்றிய படமாகவும் இருக்கலாம்…
ஆனால்
உலக நாயகன் என்ற பெயரை பெறும் போட்டியில் கமல் வென்றுவிட்டார்..
இன்று பலத்த பிரசவவலியுடன் அவர் உலக நாயகனாக பிறந்திருக்கிறார்..
திரைப்படங்களை காண்பித்து புகழடைபவர்கள் சாதாரண கலைஞர்கள் அதை காண்பிக்க வழியின்றி புகழடைவோர் மாபெரும் கலைஞர்கள்..
முகமது கேலிச்சித்திரங்களை வரைந்தது தவறு என்று தெரிந்தாலும், கருத்துச் சுதந்திரத்தை காக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கோடான கோடி இழப்பை சந்தித்த சின்னஞ்சிறிய டென்மார்க்கின் கதையை இந்த நிகழ்வுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
அன்று ஏ.. தாழ்ந்த தமிழகமே என்று பேரறிஞர் அண்ணா ஏன் சொன்னார் என்று யோசித்தோம்.. இன்று அண்ணா தீர்க்கதரிசிதான் என்று ஒப்புக் கொள்ள இதைவிட வேறென்ன ஒப்புமை வேண்டிக் கிடக்கிறது..?
அலைகளுக்காக கி.செ.துரை 25.01.2013 வெள்ளி மாலை

Friday, 4 January 2013

90 வயதிலும் பொய்யான சூளுரை!

Jan 04: நடக்க இருக்கும் திமுக  உட்கட்சித் தேர்தலில், தி.மு.க., தலைவர் பதவிக்கு, ஸ்டாலின் போட்டியிடுவதாக இருந்தார். இவரது எண்ணத்திற்கு  கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்தார். 

ஸ்டாலினுக்கு இப்போதைக்கு தலைவர் பதவி இல்லை. வாழ்நாள் முழுவதும், தமிழ் சமுதாய  மேன்மைக்காக நான் பாடுபடுவேன் எனக்கு பின், ஸ்டாலின் பாடுபடுவார் என கருணாநிதி அறிவித்தார்.

சிந்திக்கவும்: பண்டாரம் பரதேசியாக அரசியலுக்கு வந்து தமிழ் நாட்டை கொள்ளையடித்து ஆசிய பெரும் பணக்கார்கள் வரிசையில் வந்து விட்டது கருணாநிதியின் குடும்பம். 

ஜூன் 3ம் தேதி,தனது 90வது பிறந்த நாளை கொண்டாடும் கருணாநிதிக்கு ஒருபுறம் தலைவர் பதவியை விட்டு விலக மனதில்லை. மறுபுறம் தான் தலைவர் பதவியை விட்டு விலகினால் தன் கண்ணெதிரேயே திமுகவில் உள்கட்சி சண்டை வந்து உடைந்து போகும் நிலை வரலாம். இதை எல்லாம் தான் உயிரோடு இருக்கும் போது பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறார் தமிழ் ஈனத்தலைவர் கருணாநிதி. 

தனது மகன்கள் தன் கண்ணெதிரேயே சண்டையிட்டு கட்சி உடைத்து விடகூடாது,  தான் சந்தோசமா பதவியோடு எந்த பிரச்சனைகளையும் பார்க்காமல் போயி சேரவேண்டும். அதனால்தான் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் சமுதாய மேன்மைக்காக பாடுபடுவேன் என்று சொன்னது.  அதற்கும், இவருக்கு பயன்படுவது தமிழும், தமிழ் மக்களும்தான். 

தமிழ், தமிழ் சமுதாயம் என்று சொல்லி அரசியல், அதிகாரம், பணம், என்று எல்லா வளங்களையும் பெற்றவர். ஆனால் அந்த தமிழர்களுக்காக தனது வாழ்நாளில் எதையாவது உண்மையாக செய்யவேண்டும் என்று நினைத்தாரா என்றால் இல்லை என்றே சொல்லலாம். தன்னையும் தனது குடும்பத்தையும் வளப்படுத்தி கொள்ள நல்ல அரசியல் நடத்தினார்.

தமிழகம் சந்தித்த மிக கேவலமான அரசியல் தலைவர்களுள் இவரும் ஒருவர்.

பாலியல் வன்புணர்வை வைத்து அரசியல்!


Jan 01: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம்  அடைந்த மாணவியை வைத்து நன்றாக அரசியல் நடத்துகிறார்கள் ஒட்டு பொருக்கி அரசியல் கட்சியினர்.

பயனற்ற அறிவிப்புக்கள்: 1) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை அடுத்து, புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக ராணுவம் அறிவித்துள்ளது.

2) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை அடுத்து, குடியரசு தலைவரின் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

3) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை  அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை  என்று சோனியா அறிவித்துள்ளார். 

* நீங்கள் புத்தாண்டு கொண்டாடினால் என்ன! கொண்டாடாமல் போனால் என்ன!  உருப்படியாக எதையாவது செய்வதை விட்டு நீலி கண்ணீர் வடிப்பதேன்*
*******************************
பயனுள்ள சில அறிவுப்புகள்: 1)  பஞ்சாப்பில், விசாரணை என்ற பெயரில் இனி பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக் கூடாது என அம்மாநில முதல்வர், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்

2). ஆபத்தில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கான அவசர உதவி சேவை மையத்தை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே துவக்கியுள்ளார். மும்பை, புனே, நாசிக் போன்ற நகரங்களில் ஆண்டு முழுவதும் 24 மணி நேர சேவையாக இந்த மையம் செயல்படும்

3). பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில், தொடர்ச்சியாக தினசரி வழக்குகளை நடத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
*******************************
சிந்திக்கவும்: இந்திய பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பாலியல் வன்புணர்வு செய்பவர்கள் வழக்கை ஒரு மாதத்துக்குள் விசாரித்து மரணதண்டனை வழங்க வேண்டும். அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

இதில் சாதாரண குடிமகன் முதல் ராணுவம், போலீஸ், எம்.பி., எம்.எல்.ஏ. யாராக இருந்தாலும் நீதி ஒரே சமநிலையில் பேணப்பட வேண்டும். பாலியல் வன்புணர்வு வழக்குகளை விசாரிக்க தனியாக ஒரு துறை அமைக்கப்பட வேண்டும். அந்த துறை முற்றிலும் நேர்மையான அதிகாரிகளை கொண்டு நிரப்பப்பட வேண்டும். அந்த துறையின் நடவடிக்கைகளில் தலையிட அரசியவாதிகளுக்கோ, அதிகாரம் படைத்தவர்களுக்கோ உரிமை அளிக்கப்பட கூடாது. 

இப்படி ஒரு துறையை அமைத்து பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் கயவர்களை ஒரு மாதத்திற்குள் மரணதண்டனை விதித்தால் இனி ஒரு கயவனும் பெண்களை இதுபோன்ற எண்ணத்தில் பார்க்க பயப்படுவான். ஈழத்திலே, காஷ்மீரிலே, சத்தீஸ்கரிலே பெண்களை கற்பழித்த இந்திய இராணுவத்தினர், காவல் நிலைய கற்பழிப்புகளை நடத்திய இந்திய காவல்துறையினர் இவர்களின் பெயர்களை பெட்டியலிட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளை மீள் விசாரணை செய்து தண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நீதி முறையாக செயல்படுகிறது என்கிற நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனுக்கும் வரும். 

இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளி! உதயகுமார்!


Jan 02: NCHRO  (National Confederation of Human Rights Organisations) வழங்கும் இந்தியாவின் மிக சிறந்த மனித உரிமை போராளிகளுக்கான முகுந்தன் சி மேனன் நினைவு விருதை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார் பெறுகிறார்.

யார் இந்த முகுந்தன் C மேனன்: இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளியான இவர் 1948 ஆம் ஆண்டு இவர் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் செண்பகாசேரி என்கிற ஊரில் பிறந்தார். டெல்லியில் பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டு மனம் வருந்தினார். அதற்க்கெதிராக தனது வாழ்க்கையின் 35 வருடங்களை செலவிட்டு பின்னர் இயற்க்கை எய்தினார். 
 
அவர் ஆற்றிய பணிகள்: இவர்  PUCL (People's Union for Civil Liberties), மற்றும் NCHRO (National Confederation of Human Rights Organisations), KCLC ( Kerala Civil Liberties),  போன்ற மனித உரிமைகள் இயக்கங்களில் முக்கிய தலைவராக இருந்து பணியாற்றினார். டெல்லியில் பத்திரிக்கையாளராக 1970 இல் செயல்பட்டார். இந்திய பத்திரிக்கைகளான தேசஜஸ் மற்றும் மில்லி ஹெஜட் போன்ற பத்திரிக்கைகளிலும் அல்ஜெசிரா போன்ற வெளிநாட்டு தொலைகாட்சியிலும் ஜெர்னலிஸ்ட் ஆக பணியாற்றினார்.
 
முகுந்தன் சி. மேனன் விருது: மறைந்த இவரது நினைவாகத்தான் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் , சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என NCHRO அமைப்பு சார்பாக  ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு  சிறந்த மனித உரிமை போராளிகான விருது கூடங்குளம் போராட்டத்தை வழி நடத்திவர்களில் ஒருவரான டாக்டர் எஸ்.பி.உதயகுமார் அவர்களுக்கு  வழங்கப்பட இருக்கிறது . ரூ 25000 ரொக்க பரிசுடன் விருதுதும் சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளது.
 
இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளியாக விளங்கிய  முகுந்தன் C மேனன் அவர்களை ஆசிரியர்கள் குழு சார்பாக நினைவு கூர்வதில் பெருமிதம் கொள்கிறோம். அரசு பயங்கரவாதத்தால்  பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு நீதி கிடைக்க  35 வருடகாலம் அயராது உழைத்தவர். மற்றைய மனித உரிமை ஆர்வலர்களுக்கும், நமக்கும் பெரும் முன்மாதிரியாக திகழ்ந்தவர்.
 
நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

Wednesday, 5 December 2012




ஆங்கிலேயரிடம் பறிபோன
சுதந்திரத்தை.......
ஆண்டு கணக்காய் போராடி
அரும்பாடு பட்டு.......
பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க
தவறிவிட்டு .......
ஆட்சியாளர் கையிலே
பரி கொடுத்தோம்.