உண்மைசுடும்

Wednesday, 28 March 2012

நீதி மறுக்கும் நீதித்துறைகள்!


March 27, சென்னை: 1). போலீஸ் அராஜகம்: மெரினா கடற்கரையில் தமிழர் எழுச்சி இயக்கம் மற்றும் தமிழக பெண்கள் செயற்கழகம் ஆகியவை இணைந்து  அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் அவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

அவர்கள் அணு உலையின் பாதிப்பை விளக்கும் பதாதைகளை ஏந்தி போராட்டடம் செய்தனர். இதை பொறுக்காத காவல் துறை எட்டு மாத கை குழந்தை முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது.  இதில் கலந்து கொண்ட குழந்தைகள் அணு உலையின் பயங்கரத்தை விளக்கி முழக்கம் இட்டது பொது மக்கள் அனைவரையும் கவர்ந்தது.

2) அரசின் எடுபிடியாகி போன நீதித்துறை: கலெக்டரின் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர்கள் டாக்டர் வி.சுரேஷ், புகழேந்தி, ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர், மனு தாக்கல் செய்தனர். ராதாபுரம் தாலுகாவில் உள்ள, 50 கிராம மக்களை, வீட்டுச் சிறையில் அடைத்தது போல் உள்ளது என்றும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கும் வகையில், தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டது. ஆனால் அதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

3). சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்படும் நீதி: பாபர் மசூதி இடிப்பு வழக்கு முதல் குஜராத் இனப்படுகொலைகள் வரை சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே நீதித்துறை செயல்பட்டு வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் இனப்படுகொலை வழக்கில், முதல்வர் மோடிக்கும் தொடர்புள்ளது. இது தொடர்பாக விசாரித்து வரும் நானாவதி கமிஷன் கலவரத்திற்கு காரணம் மோடி தான் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நானாவதி கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. குஜராத் கலவரத்தை ஒரு தளபதிபோல் மோடியே முன்னின்று நடத்தினார் இது உலகம் அறிந்த உண்மை ஆனால் இது நமது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தெரியவில்லை போலும்.  

மன்மோகன் என்கிற சாத்தான் வேதம் ஓதுகிறது!


March 29: அணு சக்தி பயங்கரவாதம் எதிர்காலத்தில் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என மன்மோகன் சிங் திருவாய் மலர்ந்துள்ளார் 

அணு ஆயுதம் இல்லாத நிலையே உலகிற்கு பாதுக்காப்பானது என்றும் கூறியுள்ளார். தென்கொரியா தலைநகரில் நடக்கும் சர்வதேச அணு சக்தி மாநாட்டில்கலந்து கொண்டார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்.

அதில் அவர் பேசியதாவது, அணு சக்தி பயங்கரவாதம் குறித்து இந்தியா விழிப்புணர்வோடு உள்ளது என்றும் ரசாயனம், உயிரியல், மற்றும் கதிர்வீச்சு ஆயுதங்கள் பரவுவதை குறித்து தடுக்கும் ஐநாவின் தீர்மானத்தை நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்தியா முழுவதும் அணுஉலைகளை திறந்து வரும் மன்மோகன் சிங் என்கிற சாத்தான் வேதம் ஓதுகிறது. இந்தியா முழுவதிலும் மின்சாரம் தயாரிக்க அணு உலைகளை அமைக்கிறோம் என்று சொல்லி அதில் பெரும் பகுதியில் அணு குண்டு தயாரிக்க தேவையான யூரேனியம் சொரியூட்டும்வேலையை செய்து வருகிறது இந்தியா. 

மேலும் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் பேரழிவு ஆயுதங்களையும், ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்திய இலங்கை பயங்கரவாத அரசுக்கு உறுதுணையாக இருந்த இந்த மகாத்மாக்கள்தான் இப்போது சர்வதேச அளவில் வெக்கம் இல்லாமல் பொய் பேசித்திரிகிறார்கள்.

இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறை, ஏழை உழைக்கும் மக்களுக்கு எதிரான ஒரு பன்னாட்டு சுரண்டல், அரசு பயங்கரவாதம் என்று அனைத்து அளிச்சாடியங் களையும்  செய்யும் லோக்கல் ரவுடி மன்மோகன் சிங் உலகமக்களிடம் சமாதனப்புறா பறக்க விட்டிருக்கிறார்.

இதைத்தான் "முழிச்சிக்கிட்டு இருக்கும்போதே முழியை (கண்ணை) தோண்டுவது" என்று பழமொழியாக சொல்வார்களோ.

இடிந்த கரை.. இடியாத நம்பிக்கை…


 LAT_WORLD_BOOK_DAY_796558a

இதை நான் எழுதும் கடைசி ஓ பக்கமாக அறிவித்துவிடலாமா என்ற மனநிலையில்தான் எழுத ஆரம்பிக்கிறேன். என்ன எழுதி என்ன பயன் என்ற அலுப்பே காரணம். அலுப்புக்குக் காரணம் கூடங்குளம்.
பிப்ரவரி கடைசி வாரத்தில் இதே ஓ பக்கங்களில் நான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்திலிருந்து சில பகுதிகள் இதோ :
“உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவை சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். நூற்றுக்கணக்கில் செருப்புகளை வைத்திருந்தீர்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை உடைய நூலகத்தை வீட்டில் வைத்திருந்ததை மறைக்கப் பார்த்தார்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள். ந்மக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னி குவிக்கை நினைவு கூர்வது போல தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.
இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதியுங்கள். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்குங்கள். ஓரிரு துப்பாக்க்கிச் சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாதீர்கள். மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச், முதலாளிகளின் அன்புக்கும் உரியவராவீர்கள். தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கனவே அந்த இடம் உங்கள் அரசியல் பங்காளி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர். இப்போதும் மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்களின் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள். முதல் வழி உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்.”
ஜெயலலிதா புரட்சித் தலைவி அல்ல, மக்கள் விரோதத்தலைவி என்பதை நிரூபித்துவிட்டார். இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் புதன்கிழமை மதிய நேரத்தில் இடிந்தகரை கிராமத்தில் ஆயிரக்கனக்கான மக்கள் மீது ஜெயலலிதாவின் அரசும் மன்மோகன் அரசும் கூட்டாக ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ராஜ்பக்‌ஷே இலங்கையில் பின்பற்றிய எல்லா உத்திகளையும் ஜெ-மன்மோகன் கூட்டணி இங்கே பின்பற்றிக் கொண்டிருக்கிறது.போராடும் மக்களுக்கு மின்சாரம், தண்ணீர், பால், உணவு, காய்கறிகள் எதுவும் செல்லமுடியாமல் வழிகளை அடைத்து அவர்கள் மீது ஒரு முற்றுகை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரை அச்சாகி உங்கள் கைக்கு வரும் நேரத்துக்குள் இடிந்தகரையில் தடியடியோ, துப்பாக்கிச்சூடோ கூட நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அங்கே என்ன வன்முறை நடந்தாலும் அதை அரசுகள்தான் செய்திருக்குமே தவிர மக்கள் அல்ல.
சுமார் 200 நாட்களுக்கு மேலாக ஐயாயிரம முதல் நாற்பதாயிரம் வரை மக்கள் தினசரி கலந்துகொண்டு நடத்தி வந்த அறவழிப் போராட்டத்தில் துளி கூட வன்முறை கிடையாது. இந்தியாவில் 1947க்குப் பின் இது போல ஒரு அற்புதம் நிகழ்ந்ததே இல்லை. அணு உலையை பலமாக ஆதரிக்கும் தி.மு.கவும் அ.தி.மு.கவும்தான் கடந்த 45 வருடங்களாக தமிழகத்தை ஆள்பவர்கள். அவர்களுடைய தலைவர்களை கைது செய்தால் அடுத்த நொடியில் தெருவில் இறங்கி பஸ்களை உடைப்பது, எரிப்பது, கடைகளை சூறையாடுவது என்பதுதான் அவர்களுடைய அரசியல் கலாசாரம். ஒரு சிறு கல்லைக் கூட எடுத்து வீசாமல், 200 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வந்த கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மீது ஜெ-மன்மோகன் அரசுகள் பயங்கரவாதிகள் மீது போர் தொடுப்பது போல போர் தொடுத்துள்ளன.
ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். மார்ச் 18 அன்று சங்கரன்கோவில் வாக்குப்பதிவு முடிந்ததும் பெரும் போலீஸ் படை, துணை ராணுவப் படை எல்லாம் கூடங்குளத்தை சூழ்ந்துகொள்கின்றன. கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 40 ஆயிரம் மக்கள் நினைத்திருந்தால் மார்ச் 15ந் தேதியே அணு உலைக்குள் நுழைந்து அதை உடைத்து நொறுக்கியிருக்க முடியாதா? அற வழியில் போராடும் மக்களுக்கு அப்படி ஒரு சிந்தனையே வரவில்லை. இத்தனை பேர் கூடி அமைதியாக உண்ணாவிரதம் இருக்கிறோம். நாம் சொல்வதை அரசு செவி கொடுத்துக் கேட்கும் என்று நம்பினார்கள்.
அவர்கள் கேட்டது என்ன ?
உலை பாதுகாப்பானது அல்ல என்று எங்கள் சார்பில் சொல்லும் விஞ்ஞானிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். கடைசி வரை மக்களின் விஞ்ஞானிகளை சந்திக்க அரசுகளின் விஞ்ஞானிகள் முன்வரவே இல்லை.
விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தருவது பற்றி, உலையை விற்ற ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தத்தை வெளியிடுங்கள் என்று கேட்டார்கள். அரசு கடைசி வரை வெளியிடவே இல்லை.
மக்களின் கோரிக்கையை அரசு கேட்கும் என்று நம்பி நம்பி போராட்டத்தை அறவழியில் கடைசி நொடி வரையில் மக்கள் தொடர்ந்தார்கள். ஆனால் மக்கள் சொல்வதைக் கேட்கவே போவதில்லை என்பதில் இரு அரசுகளும் ஆரம்பத்திலிருந்தே பிடிவாதமாக இருந்தன. மன்மோகன் அரசு அதை பகிரங்கமாகவே நாராயணசாமி மூலம் சொல்லிக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் அரசு நடித்தே ஏமாற்றியது.
ஆனால் ஜெயலலிதாவின் அரசு இதைத்தான் செய்யும் என்பதற்கு எல்லா அறிகுறிகளும் இருந்தன. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் போராடுவோருக்கு சாதகம் போன்ற ஒரு தீர்மானத்தைப் போட்டு முதல் சீனை நடித்தது. ஆனால் அதில் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லப்பட்டது. அச்சம் போகாவிட்டால் அணு உலை வேண்டாம் என்று சொல்லபப்டவே இல்லை. அடுத்து மத்திய அரசு நியமித்த குழு முழுக்க முழுக்க அணு விஞ்ஞானிகளின் லாபியாகவே இருந்தது. அது அம்பலமானதும அதை சமாளிக்க ஜெயலலிதா அரசு நியமித்த நால்வர் குழு மிகத் தெளிவாக ஜெ கடைசியில் என்ன செய்யப்போகிறார் என்பதைக் காட்டிவிட்டது. எம்.ஆர் சீனிவாசன் அதில் இடம் பெறுவதை போராட்டக்குழுவினர் ஆட்சேபித்ததை ஜெ கண்டுகொள்ளவே இல்லை. சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு எழுத்தாளர்கள் தன்னை சந்தித்து அணு உலை எதிர்ப்பை விளக்க நேரம் கேட்டதற்கு ஒரு மரியாதைக்குக் கூட அவர் பதில் கடிதம் போடவில்லை.
நடுவில் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தேதி வராமல் இருந்திருந்தால், ஜெ அணு உலை திறப்பையும் மக்களுக்கு எதிரான யுத்தத்தையும் ஒரு மாதம் முன்பே செய்திருப்பார். இப்போது நாம் செய்யக் கூடிய ஆராய்ச்சியெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஜெவின் சொந்த புத்தியிலேயே அணு உலை நல்லது என்று படுவதால் இப்படி செய்கிறாரா அல்லது அதிகாரிகள் சொல்படி ஆடுகிறாரா அல்லது மத்திய அரசு சொத்துக் குவிப்பு, இன்னும் வெளிவராத இதர ஊழல் வழக்குகளை சி.பி.ஐயைக் காட்டி பக்குவமாக மிரட்டல் செய்திகள் அனுப்புவதால், அதன் சொல்படி கேட்கிறாரா என்றெல்லாம் ஆராயலாம். எல்லாம் வெற்று ஆராய்ச்சிதான்.
அசல் யதார்த்தம் என்னவென்றால் கூடங்குளத்தில் போராடிய ஆயிரக்கணக்கான மக்களை மன்மோகன் அரசு பகிரங்கமாகவும் ஜெயலலிதா அரசு நயவஞ்சகமாகவும் ஏமாற்றியுள்ளன என்பது மட்டும்தான். இதை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் அப்துல் கலாம், டாக்டர் சாந்தா, இனியன், சீனிவாசன், பாலு என்று ஒரு பக்கம் மெத்தப் படித்த மேதாவிகள் பட்டியலும் இன்னொரு பக்கம் நரி கையில் நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு நாலு ஆடு கேட்கும் நிலையிலான போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் நீளமானவை. படித்தவன் சூதும் வாதும் பண்ணினால், படிக்காதவன் போவான் போவான் அய்யோவென்று போவான் என்றுதான் இதைச் சொல்லவேண்டும்.
உண்மையில் ஏமாந்திருப்பது மக்கள் மட்டுமல்ல ஜெ, மன்மோகன் வகையறாக்களும்தான். எல்லாரையும் ஏமாற்றியிருப்பது அணு சக்தி துறையும் உலக அணு உலை வியாபாரிகளும்தான். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சரியாக ஒரு வருடம் கழித்து ஏப்ரல் 1, 2013ல் முட்டாள்கள் தினத்தன்று, கூடங்குளம் உலைகளிலிருந்து எத்தனை ஆயிரம் மெகாவாட் பொங்கி பிரவாகித்து தமிழகத்தில் பாலும் தேனும் ஓடச் செய்தன என்ற கணக்கைப் பார்க்கும்போது எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது புரியும். இந்தியாவில் ஒரு செர்னோபில்லோ புகோஷிமாவோ நடந்தால்தான் அறிவு வரும் என்ற மயக்கத்தில் இருப்பவர்களை யாரும் திருத்தமுடியாது. அப்படி ஒரு கொடுமை என் ஆயுட்காலத்துக்குள் நடக்கவேண்டாமென்று மட்டுமே, இல்லாத கடவுளை நான் பிரார்த்திக்க வேண்டும்.
இந்தக் கணத்தில் என்னுடைய மிகப் பெரிய வேதனையெல்லாம் கூடங்குளம் மக்கள், காந்தி போன்ற ஒரு தலைமை இல்லாமலே நடத்திய அற்புதமான காந்திய போராட்டத்தை மன்மோகனும் ஜெயலலிதாவும் அரசு இயந்திரத்தைக் கொண்டு வன்முறையால் நசுக்கிக் கொண்டிருப்பதைப் பற்றித்தான். வாஜ்பாயியும் கருணாநிதியும் இருந்தாலும் இதையேதான் செய்வார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தோழர்கள் (!) ஜி.ஆரும் தா.பாவும் கூட ஆட்சியில் இருந்தால் (நல்ல வேளை அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் அவர்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை) இதையேதான் செய்வார்கள் என்று கணிக்கவேண்டிய சூழல் இருப்பதைப் பார்க்கும்போது என் வேதனை பல மடங்கு அதிகமாகிறது.
உலையை அனுமதிப்பது என்ற முடிவை எடுத்த ஜெயலலிதா ஏன் திரும்பவும் தன்னை சந்திக்க உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரை அழைத்திருக்கக்கூடாது. ஏன் அவர்களுடைய விஞ்ஞானிகளையும் அழைத்திருக்கக்க்கூடாது ? ஏன் அவர்களிடம் தனக்கு உலை திறப்பதைத் தவிர வேறு தீர்வு இல்லை என்பதைப் பேசியிருக்கக்கூடாது ? ஓட்டு கேட்க மக்களை சந்திக்க ஓடும் ஜெவும், மகளுக்காக வீல் சேரில் டெல்ல்க்கே செல்லும் கருணாநிதியும் ஏன் அமைதியாக் கூடி உட்கார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான கூடங்குளம் மக்களை ஒரு முறை கூட போய் பார்க்க முன்வரவில்லை ?
இதுவே கூடங்குளம் மக்கள் ஜார்கண்ட் மாவோயிஸ்ட்டுகள் போல ஆயுதந்தாங்கி போராடியிருந்தால், காவல் துறை உயர் அதிகாரிகள் வள்ளியூர் வரை கூட போயிருக்க மாட்டார்களே ? களத்தில் கடைநிலை சிப்பாய்களை நிறுத்திவிட்டு சென்னை ஏ.சி.அறையிருந்தல்லவா உத்தரவிட்டுக் கொண்டிருப்பார்கள் ? இடிந்தகரைக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் உணவையும் அவர்கள் நிறுத்தியிருக்க முடியுமா ? ஜெயலலிதாவும் மன்மோகனும் சிதம்பரமும் அவர்களை பேச்சு வார்த்தைக்கு வரும்படி கெஞ்சியிருக்க மாட்டார்களா?
காந்திய அறவழியில் போராடும் மக்களிடம் தானும் அறவழியில் பேசுவதே சரியென்று ஏன் அரசுகளுக்கு உறைப்பதே இல்லை ? அமைதியாக வாழவும் அமைதியாக போராடவும் விரும்பும் மக்களை ஆயுதக் கலாசாரத்தை நோக்கி தள்ளுவது அரசுதானே? அதுதானா அரசின் உண்மை விருப்பம் ? காந்தியைக் கொல்வதுதான் அரசின் நிரந்தர திட்டமா? காந்தி இந்தியாவில் ஒரு முறை மட்டும் கொல்லப்பட்டவர் அல்ல. திரும்பத் திரும்பக் கொல்லப்படுகிறார். இந்த முறை கோட்சேவின் இடத்தில் மன்மோகனும் ஜெயலலிதாவும்.
அணு உலைகள் ஆபத்தானவை. அவற்றால் எந்தப் பெரும் பயனும் வளர்ச்சியும் நடப்பதில்லை என்ற உண்மையை கூடங்குளத்தின் பாமர மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். படித்தவர்களின் சூது அவர்களை இப்போது முறியடித்துவிட்டது. தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லக் காண்போம். அந்த நம்பிக்கையில்தான் நான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் கூடங்குளத்தில் மன்மோகன் ஜெ நடத்தும் யுத்தம் இந்த ஜனநாயகத்தின் மீது எனக்கு 35 வருடங்களாக இருந்து வந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. இனி எல்லா தேர்தலிலும் என் ஓட்டு 49ஓதான். இன்னமும் எனக்கு இந்த நாட்டு ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருப்பதற்கு ஒரே காரணம், இதை எழுதும் இந்த நொடியிலும், துளி கூட வன்முறை இல்லாமல், அறவழியில் நம்பிக்கையுடன் இடிந்த கரையில் கூடியிருக்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குறிப்பாக மீனவர்களும்தான். அவர்கள் என்றோ ஒரு நாள் அதிகரிப்பார்கள், வெல்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த வாரத்துடன் எழுதுவதை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்கிறேன்.

நன்றி www.gnani.net

Thursday, 22 March 2012

கொந்தளிக்கும் கூடங்குளம்! மக்கள் சக்தி வெல்லுமா?


March 21: முதல்வரின் வேடம் கலைந்தது:தமிழினப்பேரழிவுத் திட்டமான கூடங்குளம் அணு உலையைத் திறக்க அனுமதிப்பதென்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  
மக்கள் தலைவர் உதயகுமார்: கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த தமிழக அரசின் வேஷம் நேற்றோடு கலைந்தது. இதையடுத்து கூடங்குளம் போராட்டக் குழுவினரைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இடிந்தகரை விரைந்த உதயக்குமார், அங்குள்ள லூர்துமாதா சர்ச் வளாகத்தில் பல்லாயிரகணக்கான மக்களுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

அராஜகம் செய்ய காத்திருக்கும் காவல்துறை: உதயகுமார் இடிந்தகரையில் இன்று 2வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். கூடங்குளம் முழுவதும் பல்லாயிரக்கணக்கில் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உதயகுமாரை சரணடைய சொல்லி தொடர்ந்து போலீஸ் மிரட்டுதல் விடுத்து வருகிறது.

மேலும் ஆங்காங்கே செக்போஸ்ட் நிறுவி அந்த பகுதிக்குள் உணவு பொருட்கள் செல்வதை போலீசார் தடுத்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு உணவு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு அதிரடி நடவடிக்கை மூலம்
உதயகுமாரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். நூற்றுகணக்கில் மக்களை கைது செய்து திருச்சி, நெல்லை  சிறைகளை நிரப்பி வருகின்றனர். போலீஸ் வாகன அணிவகுப்பு மற்றும் கடலோரங்களில் ரோந்து விமானங்களை கொண்டு வட்டமடித்து மக்களை பகிரங்கமாக ஒரு மிரட்டுதலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

உதயகுமாருக்கு ஆதரவாக மக்கள் சக்தி: இந்நிலையில் தமிழக அரசின் இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாவட்டங்களை சேர்ந்த 15,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் அவர்கள் கூடங்குளத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் கடல் வழியாக கூடங்குளம் வர துவங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. தற்போது மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில்  144 ம்  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வழக்கறிஞ்சர் புகழேந்தியின் சீரிய முயற்சி: இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல் புகழேந்தி, தமிழக தலைமை செயலாளர் மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு பிறப்பித்துள்ளார். கூடங்குளத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனடியாக நீக்காவிட்டால், அவர்கள் இருவர் மீதும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SDPI கட்சி கோரிக்கைகூடன்குளம் அணுஉலையை திறக்க வேண்டும் என்ற தீர்மானம் தங்களின் உயிர்வாழும் உரிமைக்காக தன்னெழுச்சியோடு போராடும் மக்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளி உள்ளது. தமிழக அரசு தனது தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும். ஜனநாயக ரீதியில் அமைதி வழியில் போராடும் மக்களுக்கு எதிராக ஏந்த அடக்குமுறையையோ கைது நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது. கைது செய்யப்பட்ட போராட்ட குழுவினரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா வேண்டுகோள் விடுக்கிறது என்று அதன்மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்தார்.

திருமாவளவனின் நியாமான கேள்வி: கூடங்குளத்தில் திறக்கப்படவுள்ள இந்த அணுஉலைகளை கேரள மாநிலத்துப் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் அங்கே தொடங்க விடாமல் விரட்டியடித்தது ஏன் என்பதை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.  இந்த அணுஉலைகளால் பாதிப்பு இல்லையென்றால், பெருமளவில் பயன் விளையும் என்றால் கேரள மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் அத்திட்டத்தை ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

மக்களை ஏமாற்றும் போலி கம்யூனிஸ்டு: கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்  தா.பாண்டியன் திருவாய் மலர்ந்துள்ளார். இது தமிழ்நாட்டுக்கு எடுக்கப்படும் மின்சாரம் இல்லை என்பது தெரிந்தும் ஒரு போலியான வேண்டுகோள். இந்த அணு உலை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கவும், மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களை திறக்கவும் நிறுவப்பட்டது என்பது தா.பாண்டியனுக்கு தெரியாதா என்ன?

மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி:  மக்களின் விருப்பத்திற்கு எதிராக மிகப்பெரிய துரோகத்தினை தமிழக அரசு இழைத்திருக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரை பொறுமை காத்து விட்டு இப்பொழுது செயல்படுவது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். கேரளாவில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் துரத்தியடிக்கப்பட்ட அணுஉலையை கூடங்குளம் மக்கள் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும். கூடங்குளம் அணு உலை திறக்கப்படுவதால் தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறைக்கு எந்த தீர்வும் ஏற்படாது.

நாம் தமிழர் கட்சி கண்டனம்: வழக்கறிஞ்சர் சுப்பிரமணியன் உட்பட போராட்டக் குழுவினர் 11 பேரைக் கைது செய்து சென்றது, கூடப்புளி மக்கள் 183 பேரை கைது செய்து சிறை வைத்திருப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் அராஜக நடவடிக்கையாகும். தங்கள் வாழ்விற்கும், வாழ்வுரிமைகளுக்கும் அச்சறுத்தலாக அமையும் அணு உலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிவரும் மக்களை காவல் துறையைக் கொண்டு ஒடுக்குவது மக்களின் உணர்வை அவமதிக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.

கலவரத்தை உண்டாக்க துடிக்கும் தினமலம்:  பொறியில் சிக்கிய எலி என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் உதயகுமார் துணிவு உள்ளவராக இருந்தால் அணு உலை தொடக்க பணிகளை  தடுக்க வேண்டியதுதானே அதை விட்டு விட்டு ஏன் இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளது. இதன்மூலம் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் கலவரத்தை உண்டாக்கி கொஞ்சபேரை சுட்டுத்தள்ள ஐடியா கொடுகிறது கேவலமான தினமலம்.  பெரியார் சரியாகத்தான் சொன்னார் பாம்பையும் பார்பனனையும் பார்த்தால் முதலில் பாம்பை அடிக்காதே பார்பனனை அடியென்று.

களம் இறங்கியது நிஜ கம்யூனிஸ்டு: இந்த அடக்குமுறைகளும், கைதுகளும் ஏற்படுத்தும் தற்காலிகப் பின்னடைவுகளை வென்று முன் செல்வோம் என நிஜ கம்யூனிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் போராடும் மக்களுக்குத் துணை நிற்பார்கள். மேலும் “கூடங்குளம் அணு உலையை மூடு, அடக்குமுறையை நிறுத்து, பொய்வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்” என்ற முழக்கங்களின் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன என அறிவித்துள்ளனர்.  

இதுபோல் மக்கள் மீது நடத்தப்படும் அராஜகம் மற்றும் கொடுமைகள்தான் மக்களை ஆயூத போராட்டத்தை நோக்கி நகர்த்தும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட கூடாது. காந்திய வழியில் போராடினால் இனி எதுவும் நடக்காது என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. 

Wednesday, 21 March 2012

இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் நடவடிக்கை: உதயகுமார்

வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம் மேற்கொண்டுள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இடிந்தகரையில் 'முள்ளிவாய்க்கால்' நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் முழுவீச்சி நடைபெற்று வருகிறது. 

அதேவேளையில், இடிந்தகரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அங்கு, அணு உலை எதிர்ப்புக் குழு தலைவர் புஷ்பராயன், ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 15 பேர் இன்று மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 

கூடங்குளத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தமிழக போலீஸாருடன், மத்திய படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரம் குறித்து கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அளித்துள்ள பேட்டியில் கூறியது:

"இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. நாங்கள் 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் முதல் படகுகளிலும் நடந்தும் வந்து, எங்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். உண்ணாவிரதப் பந்தலில் திரண்டு இருப்பவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். 

எங்கள் பகுதியில் நேற்று முதல் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், தண்ணீரும் வரவில்லை. பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வர அனுமதிக்கப்படவில்லை. 

இடிந்தகரையில் 144 தடை உத்தரவு நீடிக்கிறது. இதனால், வெளியில் இருந்து உள்ளேயும், உள்ளேயிருந்து வெளியேயும் எவராலும் போக முடியாத நிலை நீடிக்கிறது. எங்களுக்கு ஆலோசனைச் சொல்வதற்கான நேற்றிரவு வந்த வழக்கறிஞர்கள் குழுவும் கூடங்குளத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இது, எல்லாவற்றுக்கும் 30, 40 காவல் வாகனங்கள் அவ்வப்போது ஊர் எல்லைக்கு வந்து, மக்களிடையே பீதியையும் பதற்றத்தையும் உருவாக்கிவிட்டு திருப்பிப் போய்விடுவது முதலான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 

தங்கள் வாகனங்கள் மீது கல்லேறிந்து தாக்குவதாக, அப்பாவி மக்கள் மீது பொய்களை ஊடகங்கள் மூலம் காவல்துறை பரப்புகிறது. மக்கள் வன்முறையில் ஈடுபடுவதாக நம்பவைத்து, அடக்குமுறையைக் கையாள்வதே இதன் நோக்கம். 

இடிந்தகரையில் ஆயுதம் தயாரிக்கிறார்கள் என்றெல்லாம் பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஊரில் உள்ளவர்களை தொலைபேசியை தொடர்புகொண்டு, 'அவருடன் பேசாதீர்கள்... இவர் பேச்சை கேட்காதீர்கள்...அவர்கள் உளவாளிகள்' என்றெல்லாம் சொல்லி, பீதியைக் கிளப்பும் வேலையும் நடந்துகொண்டே இருக்கிறது. எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் அனைத்து வேலைகளும் செய்யப்பட்டு வருகிறது. 

நாங்கள் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு தமிழக அரசின் காவல்துறையும், மத்திய அரசின் உளவுத்துறையும் எங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இங்கிருப்பவர்கள் எல்லாம் தமிழர்களா, இந்தியர்களா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இருக்கிறது நிலவரம். இவற்றையெல்லாம் கண்டு உண்மையில் நான் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறேன். ராஜபக்ஷே செய்யாத வேலைகளைக் கூட இந்த அரசாங்கம் செய்வதாகவே கருதும் அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்களாகிய நாங்கள், அனாதைகளாக தெருவில் இருக்கிறோம். 

ஊரில் பதற்றமும் பீதியுமாக இருப்பதால், மாணவர்களால் சரியாக பரீட்சை எழுந்த முடியாத அளவுக்கு அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

கூத்தப்புளியில் இருந்து பெண்கள் உள்பட 150 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்;  ஏன் இவர்களை திருச்சி சிறையில் கொண்டு செல்ல வேண்டும். இங்கேயே அருகில் உள்ள சிறையில் வைக்கலாமே. 

கடலூர் சிறையில் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம் தலைமையில் 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.  அணு உலை எதிர்ப்பு போராளி முகிலன் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை. 

இந்த அராஜகம் போதாது என்று நேற்று நள்ளிரவு என் பள்ளிக்கூடத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அரசின் காவல்துறையினருக்கு தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்காது. 

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்தர் பிதாரி என்னிடம் தொலைபேசியில் பேசினார். என்னை மட்டும் தனியாக சரணடையுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், என்னுடன் இருக்கும் இந்த பலலயிரக்கணக்கான மக்கள், என்னை தனியாக விடுவதற்கு அனுமதிக்கவில்லை. கைது நடவடிக்கை என்றால், அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது இங்குள்ள அனைவரின் விருப்பம். இதை அவரிடம் எடுத்துச் சொன்னேன். அதற்கு, 'இதுதான் எனது கடைசி அழைப்பு' என்று மிரட்டல் தொனியில் பேசினார்.

ஐ.ஜி. ராஜேஷ், 24 மணி நேரத்தில் உதயகுமார் கைது செய்யப்படுவார் என்று பேசியிருக்கிறார். நான் கைதாக தயாராக இருக்கிறேன்.  வன்முறைகளைத் தவிர்க்கவே விரும்புகிறோம். அதனால் தான் அமைதி வழியில் போராடுகிறோம். எங்கள் அனைவரையும் கைது செய்ய வாகனங்களை அனுப்புங்கள் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

எங்களுக்கு நேர்ந்துள்ளதைப் பார்க்கும்போது, இந்த நாட்டை பாசிச சக்திகள் ஆள்வது போல் தெரிகிறது. 
 
இடிந்தகரை உண்ணாவிரதப் பந்தலில் இருக்கும் ஆயிரக்கணக்கானோரில் பெண்கள் 70 சதவீதம் பேர். அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கஞ்சி, தண்ணீர்தான் உணவு. வேறு எதுவும் இல்லை. இந்த மக்கள் மீது எந்த சுகாதார அதிகாரிகளுக்கும் கவலை இல்லை. அரசின் கவலையெல்லாம், எங்களை வன்முறைக்குத் தூண்ட வேண்டும் என்பதும், அதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

இது ஒரு முள்ளிவாய்க்கால் நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கிறோம். தமிழ் மக்களால் பார்க்க வேண்டாம்; எங்களை மக்களாக கூட அரசு பார்க்கவில்லை. அவ்வளவு வேதனைகளைப்பட்டு வருகிறோம். ஹிட்லரின் கொடுமைகளை விட அதிகமாகவே அராஜகப்போக்குகள் காணப்படுகிறது. 

நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? இந்த நாட்டின் பிரஜைகள் தானே? எங்கள் வாழ்வாதார பாதுகாப்புக்காகவே நாங்கள் போராடி வருகிறோம்," என்றார் உதயகுமார்.

நன்றி  :http://news.vikatan.com

Wednesday, 14 March 2012

சங்கரன்கோவிலில் நடப்பது தேர்தலா? போர்களமா ?


March 11: சங்கரன்கோவில் தொகுதியில் 20 கிராமங்கள் அதிக பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப் பட்டுள்ளன. இதையொட்டி கூடுதலாக 16 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 18ம் தேதி நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 242 வாக்குச்சாவடிகள் 118 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் நாளை வருகிறது. 
சிந்திக்கவும்: உலக நாடுகளில் தேர்தல் என்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடக்கும் மக்கள் சந்தோசமாக வாக்களிப்பர். இந்தியாவில் என்னவென்றால் தேர்தல் என்றால் ஏதோ போர் நடப்பது போல் இருக்கிறது. ஏன்தான் தேர்தல் வருகிறதோ என்று மக்கள் அஞ்சும் அளவுக்கு ஒரு போர்க்காலம் போல் தேர்தல் காட்சி தருகிறது.

சிறப்பு காவல்படைகலாம், இராணுவமாம், செக் போஸ்டுகலாம், என்ன நடக்கிறது இந்த நாட்டில். கோடிக்கணக்கில் மக்கள் வரி பணத்தை செலவழித்து நடத்தப்படும் தேர்தலின் மூலம் உருவாகும் அரசுகளை கவிழ்ப்பது, கட்சி விட்டு கட்சிதாவுவது, ரவுடிகளை வைத்து அரசியல் நடத்துவது என்று இவர்கள் போடும் ஜனநாயக கூத்துகளுக்கு அளவே இல்லை. 

மதவாதம், ரவுடிசம், ஊழல், ஜாதி, போன்றவற்றின் மூலம் தேர்தல் களத்தை போர்களமாக மாற்றும்நடத்தும்  கட்சிகளையும், அதற்க்கு துணைபோகும் ரவுடிகளையும், அரசு அதிகாரிகளையும், கட்சி பொறுப்பாளர்களையும் மீதும் பாரபட்சம் இல்லாமல் காடுமையான் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

மானம் கெட்ட தமிழனும்! மானம் உள்ள பீகாரிகளும்!



March 13: பீகார் மாநிலம், அவுரங்காபாத் அருகில் உள்ள நாபி என்ற இடத்தில் பீகார் மாநில அரசு 1800 மெகாவாட் உற்பத்தி திரன் கொண்ட அனல் மின்நிலையம் அமைத்து வருகிறது.

நாபியில் உள்ள பொது மக்களும் இந்த இடத்தில், அனல் மின்நிலையம் அமைக்க வேண்டாம் என்று போராடி வருகிறார்கள். (கவனிக்க வேண்டியது கூடங்குளம் அணு மின்நிலையம்  நாபி அனல் மின்நிலையம்).
 
இந்த நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து பீகார் மாநிலத்தில் அமையும் அந்த அனல் மின் நிலையத்துக்கு தேவையான தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு 60 லாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புறப்பட்டது.

அவுரங்காபாத் அருகில் உள்ள நாபியை லாரிகள் நெருங்கிய போது போராட்டம் நடத்திய பீகார் மாநில பொதுமக்கள் தமிழக லாரிகளையும், அதிலுள்ள பொருட்களையும் இங்கு இறக்க கூடாது என்று சிறை பிடித்து வைத்துக் கொண்டனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியதாவது லாரி டிரைவர், கிளீனர்களுக்கு சரியான சாப்பாட்டு வசதியில்லாமல் கடந்த 57 நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.  உடனே மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிந்திக்கவும்: மானம்கெட்ட கருணாநிதி, போலி கம்யூனிஸ்ட்கள், தீவிரவாத இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பார்பன ஹிந்துத்துவா கூட்டமான தினமலர், சோ, சுபிரமனிய சாமி வகைறாக்கள் ஏன் இந்த செய்திகளை பற்றி பேசவில்லை. ஒரு மாநிலத்தின் 60  லாரிகள் 57 நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ளது இதை பற்றி ஏன் யாரும் வாய்திறக்க வில்லை. ஏன் இந்த மவுனம்? அதை பற்றி பேசினால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று சொல்லும் தங்களது மக்கள் விரோத முகமூடி களைந்து விடும் என்கிற பயமா.

பீகார் நாபி மக்கள் மானம்கெட்ட தமிழர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. தமிழக மக்களை போன்ற ஒரு மானம் ஈனம் இல்லாத ஜென்மங்களை உலகில் வேறு எந்த இனத்திலும் பார்க்க முடியாது. தனது உறவுகள் ஈழத்திலே கொல்லப்படும் போதும், தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போதும், வேடிக்கைபார்த்த கூட்டம் இன்று தனக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக கூடங்குளம் மக்களை பலியாக கொடுக்க ஆயிரம் உப்பு, சப்பு இல்லாத காரணங்களை சொல்லி போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

பீகார் மக்கள் எதிர்ப்பது அணு உலையை அல்ல அனல் மின்நிலையத்தைதான் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தங்கள் பகுதியின் இயற்க்கை வளங்களை, சுகாதாரத்தை எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை கவனத்தில் கொண்டு அந்த மக்கள் தொலைநோக்கு சிந்தனையோடு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். தமிழர்கள் இனியாவது திருந்துவார்களா? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மொத்த தமிழகமும் கொதித்தெலுமா. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்கும்படி செய்ய தமிழர்கள் குரல் கொடுப்பார்களா? இருப்பாய் தமிழாய் நெருப்பாய். 

Thursday, 8 March 2012

அறியாமையின் உச்சத்தில் காயல்பட்டினம்!


March 5: தூத்துக்குடி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஊர்தான் காயல்பட்டினம்.

இது படிப்பறிவு பெற்ற மக்களை, பெரும் செல்வந்தர்களை, தொழில் அதிபர்களை கொண்ட ஒரு ஊர். இவர்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு வியாபாரங்கள் மற்றும் வேலைகளில் பரவிக்கிடந்து அளப்பரிய அந்நிய செலவாணியை இந்தியாவுக்கு கொண்டு  வருபவர்கள்.

ஒரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த அறிஞர்கள் மக்கள் பணிகளில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். அப்படிப்பாட்ட ஊரில் இருந்து சிலர்  நமது விஞ்சான வடிவேலு அபுல் கலாமின் தம்பிகள் ஆகி கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர்.

அபுல்கலாம் கூடங்குளம் மக்களுக்கு 500 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மனை, அடுக்குமாடி பசுமை வீடுகள், இன்டர்நெட்டு, பிராடு பேண்டு என்று தேர்தல் வாக்குறுதியை விட கேவலமாக வாக்குறுதிகளை அள்ளி விசினார். ஆனால் இதையெல்லாம்  ஏனோ போபாலில் விசவாய்வு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஜனாதிபதியாக இருந்தும்  வழங்கவில்லை.  அணு குண்டையும் அதே நேரம் குழந்தைகளையும் நேசிக்கும் ஒரே அதிசய விஞ்சானியின் தம்பிகளாக காயல்பட்டினம் மக்களில் சிலர் மாறி கூடங்குளம் அணு உலை வேண்டும் என்ற போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று காயல்பட்டினம்  முஸ்லிம் லீக் கட்சி ( இவர்கள்தான் நாக்பூரில் பிஜேபிக்கு பஞ்சாயத்து தேர்தலில் ஆதரவு கொடுத்தவர்கள்)  கூட்டிய கூட்டத்தில் காயல்பட்டினத்தின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள்,  குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சி, SDPI ஆகியவற்றின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டார்கள். வேடிக்கை என்னவென்றால் இதில் பிஜேபியும் கலந்து கொண்டது. இந்த கூட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்றும் அதற்காக ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் வருகிற மார்ச் 6  தேதி நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

தமிழக அளவில் உள்ள எந்த கட்சிகளோ, அமைப்புகளோ இந்த ஊரில் மட்டும் தங்களது வீரியத்தை இழந்து விடும் ஒரு அவல நிலைமை தற்போது நிலவி வருகிறது. மாநில அளவிலான மனித நீதி மக்கள் கட்சி, மத்திய அளவிலான SDPI கட்சி, போன்றவற்றின் தலைவர்களும், முக்கிய பொறுப்பாளிகளும் அணு உலை என்பது ஆபத்து என்பதை உணர்ந்துள்ளனர்.  SDPI கட்சியின் மாநிலத்தலைவர் தேகலான் பாக்கவி கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர். தங்கள் கட்சி கூடங்குளம் அணு மின் நிலையத்தை தொடர்ந்து  கடுமையாக எதிர்க்கும் என்று பல கூட்டங்களில் தெரிவித்துள்ளார். 

அதுபோல் மனித நீதி கட்சியின் தலைவரும் ராமநாதபுர எம்.எல்.எ. வுமான ஜாவாஹிருல்லா கூடங்குளம் அணு உலை குறித்தும் அதன் தீமைகள் குறித்தும் கூடங்குளம் உண்ணாவிரத போராட்ட பந்தலிலேயே பேசினார். மேலும் அதனை தங்களது கட்சியும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் கடுமையாக எதிர்ப்பதாக குரல் கொடுத்தார். நிலைமை இப்படி இருக்க காயல்பாடினத்தை சார்ந்த இந்த கட்சிகளின் கிளைகள் மட்டும் தலைமையின் கருத்து மாறுபட்டு தங்கள் ஊர் என்கிற ஒரு குறுகிய மாயையில் அணு உலையை திறக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளனர். ஹிந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் முஸ்லிம் லீக்குக்கு இவர்கள் துணை போயி இருக்கிறார்கள்.

இதுபோல் இவர்கள் செய்யும் காரியம்  காயல்பட்டினத்து மொத்த மக்களையும் சுயநலம் கொண்டவர்களாக உலகுக்கு காட்டும் ஒரு விசயமாகும்.  இந்த கட்சிகள், சங்கங்கள் இந்த  நாசகார அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அதை ஆதரித்து குரல் எழுப்புவதே இங்கு கண்டனத்துக்கு உரியது. இதே காயல்பட்டினம் மக்கள்தான் dcw என்கிற தாரங்கதார கெமிக்கல் வொர்க்ஸ் என்கிற நிறுவனத்தை கடுமையாக் எதிர்த்தார்கள். இதனால் தங்கள் ஊருக்கு பாதிப்பு உண்டாகும் என்று சொல்லி  உலகம் முழுவதும் வாழும் காயல்பட்டினம் மக்களை கொண்டு அங்குள்ள இந்திய தூதரகங்களில் மனுக்களை கொடுக்க செய்தார்கள். 

இச்செயலை  நாமும் வரவேற்கிறோம். ஆனால் அதை விட மோசமான ஒன்றுதான் அணு உலை. மேலும் அணு மின் நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர்கள் காயல்பட்டினத்திற்கு வசூலுக்காக வந்த போது ஓடக்கரை ஹிந்து முன்னணியை சேர்ந்த சுகு என்கிற சுகுமாரன் அவர்களை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த ஓடக்கரை சுகுதான் காயால்பட்டினத்து மக்களுக்கு பல வழிகளில் கேடுகளையும், துயரங்களையும் ஏற்படுத்தியவர். பல சமயங்களில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில்  காயல்பட்டினத்தில் மதகலவரம் உண்டாக்கியவர் என்று நம்பாபடுபவர். இப்படி இருக்க வசூலுக்கு வந்த அப்பாவி கூடங்குளம் மக்களை இந்த சுகு தாக்கும்போது காயல்பட்டினம் மக்களில் பலர் வேடிக்கை பார்த்துள்ளனர். 

நமக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக நாசகார திட்டம் என்று தெளிவாக தெரிந்த ஒரு திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கலாமா? இதை நியாய உள்ளம் கொண்ட காயல்பட்டினம் மக்கள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான பிரச்சாரங்கள் முடிக்கி விடப்பட வேண்டும். மனித நீதி மக்கள் கட்சி, மற்றும் SDPI  போன்ற கட்சிகளின் மாநில தலைவர்கள் உடனே சம்மந்தபட்ட காயல்பட்டின கிளை நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாது அணு உலைக்கு எதிரான போராட்டங்களை காயல்பட்டினத்தில் தெரு முனை பிரச்சாரங்கள், மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் முடுக்கிவிடப்பட வேண்டும். நல்ல விசயங்களுக்கு முன்னோடிகளாக திகழும் காயல்பட்டினம் மக்கள் இதை செய்வார்கள் என்று நம்புவோம். 

                     மின்னஞ்சல் வழியாக: அபூ கதீஜா: குலசேகரன்பட்டினம்.

அன்புள்ள வாசகர்களுக்கு மின்னஞ்சல் வழியாக வந்த இந்த செய்தி கவலை அளிக்கிறது. இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் தயவு செய்து சிந்திக்கவும் இணையத்தின் வலது பக்கம் இணைக்கப்பட்டுள்ள தோழர் முத்து கிருஷ்ணன், மற்றும் கோவை பாமரன், கூடன் குளம் சிறுமி ஆகியோரின் வீடியோக்களை தவறாது பார்க்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன். அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக சிந்திக்கவும் தொடர்ந்து முழங்கும். 

மாவேஸ்ட் தோழர்களை வரவேற்கும் தமிழகம்!


March 07: இந்தியா என்கிற வல்லாதிக்க அரசால் தமிழக மக்கள் தொடர்ந்து பாதிப்புகளுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். 

ஈழத்தமிழர் விசயத்திலே ஆகட்டும், தமிழக மீனவர்கள் படுகொலை விசயத்திலே ஆகட்டும், முல்லை பெரியாறு விசயத்திலே ஆகட்டும், காவரி நதிநீர் பிரச்சனையிலே ஆகட்டும், தொடர்ந்து தமிழர்கள் இந்திய வல்லாதிக்க அரசால் புறக்கணிக்கப்பட்டு,  ஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வருகிறார்கள். 

ஈழத்தமிழர் விவகாரத்தை உலகிலேயே பேச அதிக உரிமை படைத்த ஒரு நாடு இந்தியா மட்டும்தான். அப்படி இருந்தும் அதை பேசாமல் சிங்கள பேரினவாதத்திற்கு துணை புரிந்து ஒரு மாபெரும் மக்கள் படுகொலையை நடத்த காரணமாக அமைந்தது இந்தியா. தனது நாட்டில் உள்ள ஆறரை கோடி மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தது. 

இப்பொழுது கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க போராட்ட குழுவை சார்ந்த அப்பாவி ஏழை, உழைக்கும் மக்களின் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை போட்டு அவர்களை சிறையில் அடைக்க காத்திருக்கிறது. இந்த அநீதிகளை எதிர்த்து மார்ச் 15  தேதி  "கூடங்குளம் சலோ " என்ற பெயரில் மனித உரிமை போராளிகள் ஒரு மாபெரும் பேரணியை ஏற்ப்பாடு செய்துள்ளனர். 

இந்த பேரணியை  மனித உரிமை போராளி அருந்ததி ராய், பி.சுந்தரம், ஹர்ஷ் மாந்தர், அருணா ராய், ராமச்சந்திர குகா போன்றோர் ஏற்ப்பாடு செய்கின்றார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டகாரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகிறது என்று சொன்ன பொறுப்பற்ற பிரதமர் மன்மோகன் சிங்க்குக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

நிலைமைகள் இவ்வாறு இருக்க தமிழக அரசின் உதவியோடு கூடங்குளம் அணு மின் நிலயத்தை திறக்க அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்ட குழுவை சார்ந்தவர்கள் மீதும், அதில் பங்கு பெறுபவர்கள் மீதும் தேசதுரோக வழக்குகள் பதிவாக்க காவல்துறை என்கிற அரசு ஆதிக்க இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

காந்திய வழியில் நடந்து வரும் போராட்டம் அரசு பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட போகும் நேரம் நெருங்கி விட்டது. இனி சத்தீஸ்கர் பழங்குடி மக்களை போல் ஒரு போராட்டத்தை மேற்கொள்வதை தவிர கூடங்குளம் மக்களுக்கு வேறு வழியில்லை. மேலும் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை சாத்திய வழிகளில் பெறமுடியும் என்கிற எண்ண ஓட்டத்தில் மாற்று கருத்துருவாக்கம் ஏற்ப்பட்டுள்ளது. 

தமிழக மக்கள் மாவேஸ்ட் தோழர்களை அன்போடு வரவேற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. எதிரிக்கு புரியும் மொழியில் சொன்னால்தான் விளங்கும் என்றால் அதை செய்ய இனி தமிழர்கள் தயாராக உள்ளார்கள். போராடும் மக்களின் தோழர்களே! மாவோஸ்ட் நண்பர்களே! வாருங்கள் தமிழகத்தை நோக்கி. உங்களை வருக வருக என்று வரவேற்ப்பதில் தமிழர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 

Sunday, 4 March 2012

கீற்று இணையதளத்தை மிரட்டிய உளவுத்துறை!


March 03: கீற்று இணையத்தளம் தமிழ் மக்களால், வாசகர்களால் போற்றப்படும் ஒரு சிறந்த மக்கள் ஊடகம். இதுமக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தோலுரித்து காட்டும் வகையில் சிறந்த பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதன் உரிமையாளர் நந்தன் என்கிற ரமேஷ் ஆவார். 

சமூக அக்கறையுள்ள மக்களின் எழுத்துக்களை தங்களது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம் கீற்று இணையத்தளம் உலகெங்கிலும் உள்ள தமிழ் வாசகர்களை கவர்ந்தது. இதன் பதிவுகள் மக்களின் பிரச்சனைகளை, துயரங்களை எடுத்து சொல்வதாகவும் அதிகாரவர்க்கத்திற்கு சாட்டை அடியாகவும் அமைந்தது. 

கூடங்குளம் அணு மின்நிலையம், முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் படுகொலை, ஈழத்து இன அழிப்பு என்று தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்தும் தொடர்ந்து கீற்று பதிவுகளை வெளியிட்டு வந்தது இதை பொறுக்காத இந்திய உளவுத்துறை அரசு பயங்கரவாதிகள் கீற்று உரிமையாளர் ரமேஷ் அவர்களை விசாரணை என்கிற பெயரில் அழைத்து ஒரு மிரட்டலைவிடுத்துள்ளனர். 

நீங்கள எந்த அமைப்பை சார்ந்தவர்? நெடுமாறன், வைகோ, சீமான் போன்றோர்கள் உங்களுக்கு பணம் தந்து உதவுகிறார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். உங்களுக்கு வங்கி கணக்கு உள்ளதா என்றும் கேட்டுள்ளனர். இது மக்கள் பிரச்சனைகளை எழுதும் ஊடகங்களை அச்சுறுத்தும் செயலாகும்.  இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து நியாய உணர்வுள்ள ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டும். 

ஜெயலலிதா ஆட்சியில் எழுத்து சுதந்திரம் கூட இல்லையா? இந்திய உளவுத்துறை கயவர்களுக்கு சில கேள்விகள்பயங்கரவாதிகளும், ஊழல்வாதிகளும், கேடிகளும், கிரிமினல்களும் சுதந்திரமாக பேசித்திரியும் பொழுது மக்கள் பிரச்சனைகளை பேசும் ஊடகங்களை மிரட்டுவது ஏனோ? அதிகார வர்க்கத்தின் கைகூலிகள்தான் உளவுத்துறை என்பதை மீண்டும் நிரூபிக்கும் ஒரு செயல் இது ஆகும்.இது போன்ற அச்சுறுத்தல்களை வேரறுக்க பதிபவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

முதல்வரின் முகத்திரை கிழிந்தது!


சென்னை, மார்ச் 4: கூடங்குளம் அணு மின் நிலயத்தை தொடங்க தமிழக அரசு முழு  ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்று  மத்திய அமைச்சர்  நாராயணசாமி கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, போராட்டக்காரர்களைக் கைது செய்ய வேண்டும். 12 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராட்டக்காரர்களுக்கு உதவுகின்றன. இதில் 3  தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இவர்கள் மீது 4 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

2 வழக்குகளை சிபிஐ-யும், 2 வழக்குகளை தமிழக அரசும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் மின் உற்பத்தியைத் தொடங்கக் கோரி, தமிழக மக்களிடமிருந்து மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் வருகின்றன. போராட்டக் குழுவினர் தங்கள் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், இவர்கள் மீது கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

கூடங்குளத்திலிருந்து வலுக்கட்டாயமாக ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட  ஹெர்மன் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. சுற்றுலாத் தலமில்லாத கூடங்குளத்தில் அவர் 15 நாள்கள் தங்கியிருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் அவருடைய லேப்-டாப்பில் கூடங்குளம் அணு மின்நிலைய வரைபடம் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக அவரை எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு அழைத்து வரமுடியும் என்றார் நாராயணசாமி.

சிந்திக்கவும்: 
கூடங்குளம் மக்களை ஏமாற்றிவரும் ஜெயாவின் வேடம் கலைந்தது. ஒரு பக்கம் மக்கள் போராட்டத்திற்கு எதிராக எதையும் செய்யமுடியாது என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் அணு உலைக்கு தண்ணீர் கொண்டுவர பேச்சிப்பாறை அணை கட்டை தூர்வார ஆணை பிரபித்திருப்பதுஇப்பொழுது அது அமைச்சர் மூலம் உண்மையாகி விட்டது.

நாராயண சாமியின் பேச்சுதான் பெரிய காமடி. இதுநாள் வரை அந்த தொண்டு நிறுவனங்களுக்கு பணம் வரும்போது அதை அனுமதித்த மத்திய அரசு கூடங்குளம் விசயத்தில் அந்த தொண்டு நிறுவனங்கள் உண்மைக்கும், நீதிக்கும் குரல் கொடுக்கும்போது இவர்களுக்கு கசக்கிறது. இதில் இருந்து என்ன தெரிகிறது மத்திய அரசின் அனுமதியோடு அந்த தொண்டு நிறுவனங்களுக்கு பணம் வந்து அவர்கள் அதை மக்கள் நலனுக்கு பயன்படுத்தி உள்ளார்கள். இப்பொழுது தாங்கள் கட்டும் அணு உலைக்கு எதிராக உண்மை வெளிவர உதவி செய்வதால் அவர்கள் மீது நடவடிக்கை.

ஜெர்மனியை சார்ந்த சுற்றுலா பயணி 
ஹெர்மன் கூடங்குளம் பகுதியில் பதினைந்து நாள் தங்கி இருந்தாராம். அதனால் இவர்களுக்கு சந்தேகமாம், அவர் கணனியில் கூடங்குளம் அணு மின்நிலய படம் இருந்ததாம். அப்போ ஏன்யா அவரை திருப்பி அனுப்பினீர்கள். அவரை அனுப்பிவிட்டு இப்ப சொல்கிறார் அவரை தேவைபட்டால் திருப்பி விசாரணைக்கு கொண்டு வருவார்களாம். ஏன் போபால் குற்றவாளி யூனியன் கார்பரேசன் அதிபரை மட்டும் நல்லவிதமா அனுப்பி வைத்தீர்களே ஏன்? முதலில் வரை திரும்ப கொண்டுவாருங்கள் அதற்க்கு பிறகு நாங்கள் நம்புகிறோம். இதை மாதிரி ஒரு கேவலமான அரசையும் அமைச்சர்களையும் உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.